காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம்: ஆஸ்பத்திரிக்குள் புகுந்து மகளை அரிவாளால் வெட்டியவர் கைது


காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம்: ஆஸ்பத்திரிக்குள் புகுந்து மகளை அரிவாளால் வெட்டியவர் கைது
x
தினத்தந்தி 7 Aug 2019 5:45 AM IST (Updated: 7 Aug 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

காதல் திருமணம் செய்த தனது மகளை ஆஸ்பத்திரிக்குள் புகுந்து அரிவாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.

திருமங்கலம்,

மதுரை திருமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நாகையாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வாலகுருநாதன். இவருடைய மகள் சுஷ்மா(வயது 19). இவருக்கும், பக்கத்து கிராமமான வாழவந்தான்புரத்தை சேர்ந்த ராமர் மகன் சிவசங்கரனுக்கும் (23) இடையே பழக்கம் ஏற்பட்டு, காதலித்து வந்துள்ளனர். அவர்கள் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுஷ்மாவும், சிவசங்கரனும் நாகையாபுரம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் அவர்களுக்கு போலீஸ் நிலையத்தில் திருமணம் நடைபெற்றது. வாழவந்தான்புரத்தில் உள்ள சிவசங்கரன் வீட்டில் அவர்கள் குடும்பம் நடத்தி வந்தனர். தற்போது சுஷ்மா 2 மாத கர்ப்பிணியாக உள்ளார் எனக்கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று புதுப்பட்டியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு, மருத்துவ பரிசோதனைக்காக சுஷ்மா தனது கனவருடன் சென்றார். இதுகுறித்து தகவல் அறிந்து சுஷ்மாவின் தந்தை வாலகுருநாதன் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று நலம் விசாரித்தார். அப்போது சிவசங்கரன் டாக்டரை பார்க்க உள்ளே சென்றார். சுஷ்மாவும் பின்தொடர்ந்து டாக்டர் அறைக்கு செல்ல முயன்றார்.

அந்த நேரத்தில் வாலகுருநாதன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் திடீரென்று சுஷ்மாவை வெட்டினார். இதில் அவர் அலறவே, சிவசங்கரன் ஓடிவந்தார். அதற்குள் வாலகுருநாதன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் ஆஸ்பத்திரி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காயமடைந்த சுஷ்மா சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

மேலும் இதுகுறித்து சிவசங்கரன் அளித்த புகாரின்பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலகுருநாதனை கைது செய்தனர்.

Next Story