திருவானைக்காவலில் காதல் விவகாரத்தில் பயங்கரம்: வாலிபர் மீது 5 பேர் கும்பல் சரமாரி தாக்குதல்


திருவானைக்காவலில் காதல் விவகாரத்தில் பயங்கரம்: வாலிபர் மீது 5 பேர் கும்பல் சரமாரி தாக்குதல்
x
தினத்தந்தி 8 Aug 2019 4:45 AM IST (Updated: 8 Aug 2019 1:15 AM IST)
t-max-icont-min-icon

திருவானைக்காவலில் காதல் விவகாரத்தில் வாலிபர் மீது 5 பேர் கும்பல் சரமாரி தாக்குதல் நடத்தியது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

ஸ்ரீரங்கம்,

திருச்சி திருவானைக்காவல் திம்மராயசமுத்திரம் பகுதியை சேர்ந்த கிட்டப்பாவின் மகன் மணிகண்டன் (வயது 25). கொத்தனாரான இவருக்கு திருமணமாகிவிட்டது. இந்த நிலையில் மணிகண்டன் அதே பகுதியில் இளம்பெண் ஒருவரை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் அவரது அண்ணனுக்கு தெரியவந்தது. நேற்று மாலை மணிகண்டன் திருவானைக்காவல் பாரதிநகரில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழி மறித்து தாக்க தொடங்கினர். இதனால் அவர் அலறி அடித்துக்கொண்டு அருகில் இருந்த அடகுக்கடைக்குள் புகுந்தார். இருப்பினும் விடாமல் அந்த கும்பல் அவரை அடகுக்கடையில் இருந்து பிடித்து வெளியே இழுத்து வந்து ரோட்டில் வைத்து இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர். மேலும் அதில் ஒருவர் மாறி ஒருவர் அரிவாளை திருப்பி மறுபக்கத்தால் மணிகண்டனை தாக்கினர். அவரை கொலை செய்யும் நோக்கில் விடாமல் தொடர்ந்து தாக்கிய பின் அங்கிருந்து அந்த கும்பல் தப்பியோடியது. இந்த தாக்குதலில் மணிகண்டன் படுகாயமடைந்து கிடந்தார். இந்த சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீரங்கம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் மணிகண்டனை 5 பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று இரவு வைரலாக பரவியது. இந்த வீடியோவை பார்த்தவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியினர். மணிகண்டனை தாக்கிய நபர்கள், அவர் காதலித்த பெண்ணின் சகோதரர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் என அடையாளம் தெரிந்தது. அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதற்கிடையில் மணிகண்டனை தாக்கிய கும்பல் நேற்று இரவு போலீசாரிடம் சரண் அடைந்ததாக தகவல் பரவியது. இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசாரிடம் கேட்ட போது சம்பந்தப்பட்ட நபர்கள் யாரும் சரண் அடையவில்லை எனவும், அவர்கள் 5 பேரையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். வாலிபர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அந்த பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story