கலைமாமணி உள்ளிட்ட விருதுகளை வழங்குவதற்கு தடை விதிக்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு; தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு


கலைமாமணி உள்ளிட்ட விருதுகளை வழங்குவதற்கு தடை விதிக்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு; தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 7 Aug 2019 11:30 PM GMT (Updated: 7 Aug 2019 7:57 PM GMT)

கலைமாமணி உள்ளிட்ட விருதுகளை வழங்குவதற்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் மதுரை ஐகோர்ட்டு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.

மதுரை,

நெல்லையைச் சேர்ந்த நாதஸ்வர கலைஞர் மாரியப்பன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

தமிழக அரசால் கலைகளை ஊக்குவிக்கும் வகையில் இயல், இசை, நாடக மன்றம் உருவாக்கப்பட்டது. இதன் முக்கிய குறிக்கோள் இயல், இசை, நாடகம், கதா கலாட்சேபம் உள்ளிட்ட கலைகளை மேம்படுத்துவதுதான். தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தில் உள்ள உறுப்பினர்கள் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட வேண்டும்.

ஆனால் கடந்த 2015–ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் தேர்தல் முறை மாற்றப்பட்டு 22 பேர் நியமனம் செய்யப்பட்டனர். இந்த நியமனத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. முடிவில், நியமனம் செய்யப்பட்ட 22 பேரும் எந்தவித கொள்கை முடிவும் எடுக்கக் கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் கடந்த 2011 மற்றும் 2018–ம் ஆண்டிற்கான கலைமாமணி விருது உள்ளிட்ட விருதுகளுக்கு 200 பேரை தேர்வு செய்து தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சட்ட விரோதமானது.

மேலும் விருதுக்கு தேர்வு செய்பவர்கள் 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஒரு துறையில் உள்ளவர் மற்றொரு துறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே கலைமாமணி உள்ளிட்ட விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும் வருகிற 13–ந்தேதி நடைபெற உள்ள தமிழக அரசின் சுற்றுலாத்துறை மற்றும் விருது வழங்கும் விழாவிற்கும் தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


Next Story