ஆரல்வாய்மொழி அருகே மலையடிவாரத்தில் அட்டகாசம் சிறுத்தை புலி 2 ஆடுகளை கடித்து கொன்றது


ஆரல்வாய்மொழி அருகே மலையடிவாரத்தில் அட்டகாசம் சிறுத்தை புலி 2 ஆடுகளை கடித்து கொன்றது
x
தினத்தந்தி 8 Aug 2019 11:00 PM GMT (Updated: 8 Aug 2019 8:49 PM GMT)

ஆரல்வாய்மொழி அருகே மலையடிவாரத்தில் புகுந்த சிறுத்தை புலி 2 ஆடுகளை கடித்து கொன்றது. மேலும் 9 ஆடுகள் படுகாயமடைந்தன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஆரல்வாய்மொழி,

நெல்லை மாவட்டம் பணகுடி பெருங்குடி பகுதியை சேர்ந்தவர் சுப்பையா (வயது 52). இவர் 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் ஆரல்வாய்மொழி மூவேந்தர் நகருக்கு அருகில் உள்ள மலை அடிவாரத்தில் நிலக்கடலை விளையும் இடத்தில் கடந்த 15 நாட்களாக ஆடுகளுடன் முகாமிட்டிருந்தார்.

இதற்காக மலையடிவாரத்தில் ஆட்டு கிடை உருவாக்கினார். அதாவது, மூங்கில் தட்டிகளால் வேலி அமைத்து மேய்ச்சலுக்கு பிறகு ஆடுகளை அங்கு கட்டியிருந்தார். மேலும் அதன் அருகில் மாடம் அமைத்து, அதில் சுப்பையா தங்கினார்.

சிறுத்தை புலி தாக்கியது

நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் சுப்பையா தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டது. ஆடுகள் அங்குமிங்கும் ஓடின. இந்த சத்தம் கேட்டு கண்விழித்த சுப்பையா அதிர்ச்சி அடைந்தார். சிறுத்தை புலி ஒரு ஆட்டை கடித்தபடி இருந்தது. உடனே சுப்பையா, டார்ச்லைட்டை அடித்தபடி சிறுத்தை புலியை துரத்தினார். டார்ச்லைட்டுடன் ஒருவர் ஓடி வருவதை பார்த்ததும் சிறுத்தை புலி, ஆட்டை கவ்வியபடி வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

இதனையடுத்து சுப்பையா மற்ற ஆடுகளை ஆட்டு கிடைக்குள் அடைத்தார். மேலும் அங்கு 9 ஆடுகள் சிறுத்தை புலி தாக்கியதில் காயமடைந்த நிலையில் இருந்ததை பார்த்து கதறி அழுதார். 2 ஆடுகளை சிறுத்தை புலி கடித்து கொன்றதும் தெரிய வந்தது. இதற்கிடையே நேற்று அதிகாலையில், மறுபடியும் சிறுத்தை புலி இங்கு வந்து ஆடுகளை தாக்கும் என அச்சமடைந்த சுப்பையா, அந்த இடத்தை காலி செய்து விட்டு சொந்த ஊருக்கு கிளம்பினார்.

பொதுமக்கள் அச்சம்

வனப்பகுதியை விட்டு வெளியேறி மலையடிவாரத்தில் புகுந்த சிறுத்தை புலி, ஆடுகளை வேட்டையாடிய சம்பவம் ஆரல்வாய்மொழி பகுதியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சிறுத்தை புலி, ஊருக்குள் புகுந்து விடுமோ என்ற அச்சமும் அங்குள்ள குடியிருப்பு வாசிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே, சிறுத்தை புலியை கண்காணித்து வேறு ஏதேனும் அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விடாமல் இருக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story