மாவட்டம் முழுவதும் 12 மணி நேரம் தொடர்ந்து பெய்த மழை
மாவட்டம் முழுவதும் நேற்று 12 மணி நேரம் தொடர்ந்து மழை பெய்தது.
தேனி,
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால், தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. ஆண்டிப்பட்டியில் 2 மில்லி மீட்டர்., அரண்மனைப்புதூரில் 12 மி.மீ., போடியில் 3.2 மி.மீ., கூடலூரில் 23 மி.மீ., பெரியகுளத்தில் 2 மி.மீ., உத்தமபாளையத்தில் 5 மி.மீ., வைகை அணையில் 3 மி.மீ., வீரபாண்டியில் 4 மி.மீ. என மழையளவு பதிவானது.
உத்தமபாளையம், சின்னமனூர், கூடலூர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. தொடர்ந்து தேனி, பெரியகுளம், போடி, ஆண்டிப்பட்டி, கம்பம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று அதிகாலை 4 மணிக்கு சாரல் மழை பெய்ய தொடங்கியது.
போடி, மீனாட்சிபுரம் பகுதிகளில் மட்டும் அவ்வப்போது பலத்த மழை பெய்தது. மற்ற இடங்களில் பகல் முழுவதும் சாரல் மழையாகவே பெய்து கொண்டு இருந்தது. அதிகாலை முதலே வானில் மேகமூட்டம் காணப்பட்டதால் தேனி நகர மக்கள் நேற்று சூரியன் உதிப்பதை காண முடியவில்லை. பகல் முழுவதும் நீடித்த இந்த மழை மாலை 4 மணி வரை பெய்தது. சுமார் 12 மணி நேரம் தொடர்ந்து மழை பெய்தததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் காலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடியே பள்ளிக்கு சென்றனர்.
இதில், சிலர் மழையில் நனையாமல் இருக்க குடை பிடித்துக் கொண்டும், மழைக் கான கோட் அணிந்து கொண் டும் பள்ளிக்கு சென்றனர்.
போடி பகுதியில் நேற்று இயக்கப்பட்ட ஒரு அரசு பஸ்சின் மேற்கூரை வழியாக மழைநீர் பஸ்சுக்குள் ஒழுகியது. இதனால் அவதிப்பட்ட பயணிகள் பஸ்சுக்குள் குடை பிடித்து பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
தொடர்மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையில் இருந்து தற்போது தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
இதன் காரணமாக முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையடுத்து கம்பம் அருகே உள்ள தொட்டமாந்துறை தடுப்பணையிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
Related Tags :
Next Story