பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சமயபுரம் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை


பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சமயபுரம் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
x
தினத்தந்தி 11 Aug 2019 4:15 AM IST (Updated: 11 Aug 2019 2:22 AM IST)
t-max-icont-min-icon

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சமயபுரம் ஆட்டுச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

சமயபுரம்,

திருச்சி மாவட்டத்தில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தையாக சமயபுரத்தில் ஒத்தக்கடையில் உள்ள ஆட்டுச்சந்தை விளங்குகிறது. சனிக்கிழமை தோறும் நடைபெறும் இந்த சந்தைக்கு ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும்.

இந்தநிலையில் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகாலை 4 மணிக்கே ஆட்டு வியாபாரிகள் சரக்கு ஆட்டோ, வேன், லாரி போன்ற வாகனங்களில் ஆடுகளை விற்பனைக்காக கொண்டுவந்தனர்.

களைகட்டியது

இவற்றை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களும், இறைச்சிக்கடைக்காரர்களும், வியாபாரிகளும் சந்தையில் குவிந்தனர். அவர்கள் தங்களுக்கு தேவையான ஆடுகளை போட்டி போட்டு வாங்கிச்சென்றனர். இதனால் விற்பனை களைகட்டியது.

ஆடுவாங்க வந்த இளைஞர்கள் பலர் ஆடுகளுடன் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர். தன்னை வளர்த்த எஜமானிடம் இருந்து பிரிய மனம் இல்லாமல் இருந்த ஆடுகளை சிலர் வலுக்கட்டாயமாக இருசக்கர வாகனத்தில் ஏற்றிச்சென்றதையும் காணமுடிந்தது.

ரூ.20 ஆயிரம் வரை விற்பனை

இந்த சந்தையில் ஆடுகளின் உருவம் மற்றும் எடையைப் பொறுத்து சராசரியாக ஒரு ஆடு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை விற்கப்படும். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று ரூ.9 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விலைபோனது. நேற்று ஒரே நாளில் ரூ.1 கோடி மதிப்பில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர். அத்துடன் ஆயிரக்கணக்கானோர் ஒத்தக்கடை ஆட்டுச்சந்தையில் கூடியதால் அந்த பகுதியில் டீக்கடை, டிபன் கடை, கம்மங்கூழ், பழக்கடை உள்ளிட்ட கடைகள் திடீரென்று தோன்றின. இதனால் அப்பகுதி நேற்று பரபரப்புடன் காணப்பட்டது.

Next Story