நீர்வரத்து வினாடிக்கு 1.15 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 72 அடியை தாண்டியது


நீர்வரத்து வினாடிக்கு 1.15 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 72 அடியை தாண்டியது
x
தினத்தந்தி 12 Aug 2019 4:45 AM IST (Updated: 12 Aug 2019 1:03 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்து, 72 அடியை தாண்டியது.

மேட்டூர்,

கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூருக்கு வருகிறது. தற்போது வினாடிக்கு 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வருவதால் ஒகேனக்கல்-மேட்டூர் இடையே காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேலும் அணையின் நீர்மட்டமும் கிடு, கிடு என உயர்ந்து வருகிறது.

நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 82 ஆயிரம் கனஅடியாக இருந்தது. கடந்த 9-ந் தேதி 54.50 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்து 62.50 அடியாக அதிகரித்தது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது.

இந்த நிலையில் நேற்று காலை மேட்டூருக்கு வினாடிக்கு 93 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. பின்னர் நேற்று மாலை 5 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 15 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 72.50 அடியாக உயர்ந்தது. இதன்படி ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 10 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் ஒகேனக்கல்லில் இருந்து வரும் தண்ணீர் சேலம் மாவட்ட எல்லையான அடிப்பாலாறு பகுதியில் இருகரைகளையும் தொட்டபடி கரைபுரண்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள கரையோர கிராமங்களான கோட்டையூர், செட்டிப்பட்டி, பண்ணவாடி உள்பட பல்வேறு கிராமங்களில் மேட்டூர் உதவி கலெக்டர் லலிதா, தாசில்தார் அசின்பேகம் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்கள். மேலும் கிராமங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள். தண்டோரா மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடியாகும். தற்போது அணையின் நீர்மட்டம் 72 அடியை தாண்டி விட்டதால், அணைக்கு தொடர்ந்து தண்ணீர் அதிகமாக வரும்பட்சத்தில், விரைவில் நிரம்பி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story