மத்திய அரசுக்கு எதிரான கருத்துகளை ரஜினிகாந்திடம் எதிர்பார்க்க முடியாது - தொல். திருமாவளவன் தாக்கு
மத்திய அரசுக்கு எதிரான கருத்துகளை ரஜினிகாந்திடம் இருந்து எதிர்பார்க்க முடியாது என்று தொல்.திருமாவளவன் கூறினார்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூரில் உள்ள ஒரு ஓட்டலில் தூத்துக்குடி டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளையின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு ஆதிதிராவிட மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. அறக்கட்டளை தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார். விஜயராஜன் முன்னிலை வகித்தார். துணை பொருளாளர் சுரேஷ் குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., கனிமொழி எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் மற்றும் பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்.
நிகழ்ச்சியில் தொல்.திருமாவளவன் எம்.பி. பேசும் போது கூறியதாவது;-
கல்வி எவ்வளவு பெரிய விடுதலைக்கான ஆயுதம் என்பதை அறிவதற்கான சாட்சி புரட்சியாளர் அம்பேத்கர் தான். அவர் சாதாரணமான மனிதரை போல் இருந்து இருந்தால் தற்போது இந்தியாவில் பலர் கல்வி அறிவை பெற்றிருக்க முடியாது. வேலை வாய்ப்புக்காக, நிரந்தர சம்பளத்துக்காக படிக்கும் கல்வி அறிவை அம்பேத்கர் படிக்கவில்லை. அதனையும் தாண்டி உலக அறிவை அவர் பெற்றார். ஒரு தேசத்தின் தலைமை விதியை தீர்மானிக்க கூடிய திறனையும் அவர் பெற்று இருந்தார்.
வேலை கிடைத்தால் போதும், சம்பளம் கிடைத்தால் போதும் என்பதற்காக படிக்கும் சராசரி கல்வியை விட தரமான கல்வியை மாணவர்கள் அனைவரும் படிக்க வேண்டும். உங்களிடம் இருந்து சிறந்த தலைவர்கள் உருவாக வேண்டும்.
திருச்செந்தூரில் அம்பேத்கர் சிலை அமைக்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் அனுமதி அளிக்க வேண்டும். இது என் கோரிக்கையாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி, முன்னாள் எம்.பி. அப்பாதுரை, இமயா கக்கன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முரசுதமிழப்பன், அறக்கட்டளை துணை தலைவர் சமுத்திரம், நிர்வாக செயலாளர் ஜெயகீதன், இணை நிர்வாக செயலாளர் ராஜன், பொருளாளர் மதிவாணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடும் பதற்றம் நிலவுகிறது. பொதுமக்களின் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது. அங்கு நடைபெறும் விஷயங்கள் வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக ஊடகத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த சிறப்பு உரிமைகளையும், அதிகாரங்களையும் மத்திய அரசு ரத்து செய்து உள்ளது. இது ஒரு மாபெரும் வரலாற்று துரோகமாகும். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
இந்தியாவிலேயே முதல்முறையாக தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஒன்றுகூடி மத்திய அரசின் போக்கை கண்டித்து உள்ளது. நாடாளுமன்ற அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் அடங்கிய குழு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு செல்ல மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளோம். இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து மீண்டும் கூடி கலந்தாய்வு செய்வோம் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
ஜனநாயகத்தையும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் தகர்க்க கூடிய வகையில் மோடி அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதனுடைய உச்ச நிலையாகத்தான் ஜம்மு-காஷ்மீர் உரிமைகளை ரத்து செய்ததாக பார்க்கப்படுகிறது. இதை கண்டித்து இந்திய அளவில் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைய உள்ளோம்.
நெருக்கடியான நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி நியமிக்கப்பட்டது சரியான முடிவு. இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. வேலூர் தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற்று உள்ளது. தோல்விக்கு பிறகு தொண்டர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக அ.தி.மு.க. பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
அதேபோன்று ரஜினிகாந்திடம் இருந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்கள் வரும் என்று எதிர்பார்க்க முடியாது. அவர் மத்திய அரசுக்கு ஆதரவான கருத்துக்களை கூறுவது உண்டு. ஆகையால் மகாபாரதத்தில் இருந்து மோடி, அமித்ஷாவுக்கு உவமையாக சொல்லப்பட்ட கருத்தில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. இது அதிர்ச்சி அடையக்கூடியதும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story