முதலைப்பட்டி ஏரியில் 39 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு ஐகோர்ட்டில் விரைவில் அறிக்கை தாக்கல்


முதலைப்பட்டி ஏரியில் 39 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு ஐகோர்ட்டில் விரைவில் அறிக்கை தாக்கல்
x
தினத்தந்தி 11 Aug 2019 10:45 PM GMT (Updated: 11 Aug 2019 8:25 PM GMT)

குளித்தலை அருகே தந்தை-மகன் கொலை வழக்கில் முதலைப்பட்டி ஏரியில் 39 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் முழுவதும் மீட்கப்பட்டு ஐகோர்ட்டில் விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

நச்சலூர்,

கரூர் மாவட்டம், குளித்தலை தாலுகா சேர்ந்தது முதலைப்பட்டி கிராமம். இங்கு அரசுக்கு சொந்தமான 100 ஏக்கருக்கும் மேலான பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இதில் 39 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு சில ஆண்டுகளாக சிலர் விவசாயம் செய்து வந்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி திருச்சி மாவட்டம், இனாம்புலியூரை சேர்ந்த வீரமலை. இவரது மகன் நல்லதம்பி ஆகியோர் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதில் சமீபத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டது.

இந்தநிலையில் கடந்த 29-ந்தேதி வீரமலையும், அவரது மகன் நல்லதம்பியும் முதலைப்பட்டியில் வைத்து வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். மேலும் இந்த கொலை வழக்கை தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்து கொண்ட மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதிகள் ஆக்கிரமிப்புக்கு காரணமாக அதிகாரிகளுக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்தனர்.

39 ஏக்கர் நிலம் மீட்பு

மேலும் வருகிற 14-ந்தேதிக்குள் இதுகுறித்து விசாரணை அறிக்கையை குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் வருவாய்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். கடந்த 5 நாட்களாக நடந்து வந்த மீட்பு பணிகள் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவுவடைந்தது. 39 ஏக்கரும் மீட்கப்பட்டு பொக்லைன் எந்திரங்கள் மூலம் நிலத்தில் இருந்து மண் அள்ளப்பட்டு கரை உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து இதுகுறித்த அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story