ஆபத்தை உணராமல், வைகை அணைக்குள் குழந்தைகளை குளிக்க வைக்கும் பெற்றோர் - விபரீதம் ஏற்படும் முன்பு தடுக்கப்படுமா?


ஆபத்தை உணராமல், வைகை அணைக்குள் குழந்தைகளை குளிக்க வைக்கும் பெற்றோர் - விபரீதம் ஏற்படும் முன்பு தடுக்கப்படுமா?
x
தினத்தந்தி 13 Aug 2019 4:15 AM IST (Updated: 13 Aug 2019 12:15 AM IST)
t-max-icont-min-icon

வைகை அணைக்குள் ஆபத்தை உணராமல் குழந்தைகளை பெற்றோர் சிலர் குளிக்க வைக்கின்றனர். இதனால் விபரீதம் ஏற்படும் முன்பு தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி,

ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. இந்த அணைப் பகுதியில் வலது கரை பூங்கா, இடது கரை பூங்கா என இரு பூங்காக்கள் உள்ளன. அணையை பார்வையிடவும், பூங்காவில் பொழுதுபோக்கவும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

குறிப்பாக விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. சில நாட்களாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை அணைக்கு நேற்று வினாடிக்கு 739 கன அடி வீதம் தண்ணீர் வரத்து இருந்தது.

71 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் நேற்று காலையில் 36.68 அடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 60 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 709 மில்லியன் கன அடியாக உள்ளது.

அணைக்கு நீர்வரத்து அதிகம் உள்ள நிலையில், அணையின் நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இந்த அணை தூர்வாரப்படாததால் அணைக்குள் அதிக அளவில் வண்டல் மண் படிந்து சேறும், சகதியுமாக உள்ளது. இதை அறியாமல் கடந்த சில ஆண்டுகளில் அணைக்குள் இறங்கி குளித்த பலர் நீரில் மூழ்கி பலியாகி உள்ளனர்.

இருப்பினும் அணைக்குள் இறங்கி குளிப்பவர்கள் தடுக்கப்படுவது இல்லை. தற்போது நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில், தினமும் பலர் குழந்தைகளுடன் அணைக்குள் இறங்கி ஆபத்தான முறையில் குளித்து வருகின்றனர். குழந்தைகளை அணைக்குள் இறங்கி குளிக்க வைத்து செல்போனில் புகைப்படம் எடுத்து பெற்றோர் மகிழ்கின்றனர்.

குழந்தைகள் ஆர்வ மிகுதியால் ஆழத்துக்குள் சென்று சேற்றில் சிக்கிக் கொள்ளும் அபாயமும் உள்ளது. எனவே, அணைக்கு செல்லும் பெற்றோர்கள் அணைக்குள் இறங்குவதையும், குழந்தைகளுடன் குளிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

அணை பகுதியில் கண்காணிப்பு பணிக்கு கூடுதல் பணியாளர்களை நியமித்து, இதுபோன்று ஆபத்தான முறையில் யாரையும் குளிக்க விடாமல் தடுக்கவும், அணை பகுதியில் ஆங்காங்கே விழிப்புணர்வு பதாகைகள் வைக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story