பாபநாசம் பட பாணியில் வாலிபரை கொலை செய்து நாடகமாடிய குடும்பத்தினர்
பாபநாசம் பட பாணியில் வாலிபரை கொலை செய்து நாடகமாடிய குடும்பத்தினர் போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் சிக்கினர்.
மும்பை,
மும்பை வடலா பகுதியை சேர்ந்தவர் மீனவர் விஜேந்திரா (வயது27). இவர் கடந்த ஜூன் மாதம் 15-ந் தேதி வடலா கணேஷ் நகர் பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் பிணமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்டு இருந்தது.
எனினும் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தவும், விசாரணை முடியும் வரை உயிரிழந்த வாலிபரின் உடலை பாதுகாத்து வைக்கவும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது.
இதேபோல விஜேந்திரா பிணமாக மீட்கப்பட்ட போது செருப்பு அவரது கால்களில் இல்லை. யாரோ ஒருவர் எடுத்து வந்து வைத்தது போல அவை அவரது உடல் அருகில் வைக்கப்பட்டு இருந்தது.
வழக்கமாக மதுபோதையில் ரோட்டில் கிடப்பவர்கள் காலில் செருப்புடன் தான் கிடப்பார்கள். அல்லது செருப்பு வெவ்வேறு இடங்களில் சிதறி கிடக்கும். எனவே இது போலீசாருக்கு வாலிபரின் சாவில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே போலீசார் வேறு கோணத்திலும் விசாரிக்க தொடங்கினர்.
விஜேந்திரா அதே பகுதியை சேர்ந்த காஜல் என்ற பெண்ணை 5 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்த வந்துள்ளார். ஆனால் காஜலின் பெற்றோர் அவரை 2 ஆண்டுகளுக்கு முன் சத்தாராவை சேர்ந்த தொழில் அதிபருக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். இந்த தகவலை விஜேந்திராவின் சகோதரர் விஸ்வா போலீசாரிடம் தெரிவித்தார்.
திருமணத்திற்கு பிறகும் விஜேந்திரா அடிக்கடி சத்தாராவிற்கு சென்று காஜலை சந்தித்து வந்து உள்ளார். இதையடுத்து போலீசார் சத்தாராவிற்கு சென்று காஜலிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சம்பவத்தன்று விஜேந்திரா தன்னை சந்திக்க வரவில்லை என கூறி விட்டார்.
இதையடுத்து போலீசார் வடலாவில் உள்ள காஜலின் குடும்பத்தினரிடம் விசாரித்தனர். அப்போது குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் கமல் நடித்த பாபநாசம் படம் போல ஒரே மாதிரியான பதிலை போலீசாரிடம் கூறினர்.
அவர்கள், வட் பூர்ணிமா அன்று விஜேந்திராவை விருந்துக்கு அழைத்து இருந்ததாகவும், அவர் வந்து சாப்பிட்டு சென்றுவிட்டதாகவும் கூறினர். எல்லோரும் ஒரே மாதிரியான பதிலை அளித்தது போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து போலீசார் காஜலை பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன.
சமீபகாலமாக காஜலுக்கு விஜேந்திரா தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதாவது, உனது கணவரை விட்டு பிரிந்து வந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தி உள்ளார்.
இதையடுத்து அவர் விஜேந்திராவை கொலை செய்ய முடிவு செய்தார். சம்பவத்தன்று பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்த காஜல் விருந்துக்கு வருமாறு விஜேந்திராவை அழைத்து உள்ளார். இதையடுத்து வீட்டுக்கு வந்த விஜேந்திராவுக்கு அவர் எலி மருந்து கலந்த உணவை கொடுத்து உள்ளனர். பின்னர் அவருக்கு மதுபானத்தை கொடுத்து உள்ளனர். இதில் அவர் காஜலின் வீட்டிலேயே மயங்கி விழுந்து பலியாகி உள்ளார். பின்னர் அவர்கள் உடலை கணேஷ் நகரில் போட்டு சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “காஜல் பெற்றோரின் வீட்டருகே உள்ள சாக்கடையில் எலி மருந்து பாட்டிலை கைப்பற்றி உள்ளோம். பிரேத பரிசோதனையில் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சரியான அளவில் விஷத்தை கலந்து கொடுத்து உள்ளனர்’’ என்றார்.
இந்த சம்பவம் குறித்து காஜலை கைது செய்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story