வால்பாறையில், மழையால் பாதிப்படைந்த போக்குவரத்து கழக பணிமனை - நிர்வாக இயக்குனர் நேரில் ஆய்வு


வால்பாறையில், மழையால் பாதிப்படைந்த போக்குவரத்து கழக பணிமனை - நிர்வாக இயக்குனர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 12 Aug 2019 10:45 PM GMT (Updated: 13 Aug 2019 12:16 AM GMT)

வால்பாறையில் மழையால் பாதிப்படைந்த அரசு போக்குவரத்துக்கழக பணிமனையை நிர்வாக இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார்.

வால்பாறை,

வால்பாறை பகுதியில் கடந்த 16 நாட்களாக பெய்த கனமழை காரணமாக வாழைத்தோட்டம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வாழைத்தோட்டம் மற்றும் ஸ்டேன்மோர்ஆத்துமட்டம் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும், அரசுபோக்குவரத்துக்கழக பணிமனைக்குள்ளும் ஆற்றுத் தண்ணீர் புகுந்து ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டது.இதனால் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகினர். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரையும் தமிழ்நாடு அரசு சார்பில் வால்பாறை அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உதவிகள் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முதல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டவர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பினார்கள்.வால்பாறை அரசு போக்குவரத்துக்கழக பணிமனை யில் மட்டும் மழைத் தண்ணீரும்,சேறும், சகதியும் நிறைந்துள்ளது.இதனால் பணிமனைைய தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலையே இருந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கோவை மண்டல நிர்வாக இயக்குனர் அன்புஆபிரகாம் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.பணிமனையின் பராமரிப்புக்குத் தேவையான உதவிகளை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.மேலும் கோவை மாவட்ட கலெக்டரிடம் பணிமனையின் நிலைகுறித்து எடுத்துக்கூறி தூர்வாறும் பணியை மேற்கொண்டு மழைகாலத்தில் ஏற்படும் இந்த ஆபத்தான சூழ்நிலைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும்,வால்பாறை அரசுபோக்குவரத்துக்கழக கிளைக்கு விரைவில் 10 புதிய அரசுபஸ்கள் வழங்கப்படும் என்றும் என்றும் தெரிவித்தார்.

பின்னர் அரசுபோக்குவரத்துக்கழக பணிமனையில் பணிபுரியும் பணியாளர்களின் குறைகளையும் கேட்டார். அனைத்து குறைகளையும் நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.பின்னர் மழைத் தண்ணீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட பணிமனை,அலுவலகம்,உதிரி பாகங்கள் வைக்கும்அறை,டீசல்டேங்க்,பணிமனை வளாகம் முழுவதும் பார்வையிட்டார்.இந்த ஆய்வின் போது அரசுபோக்குவரத்துக்கழக பொதுமேலாளர் மகேந்திரன், நிதிகட்டுப்பாட்டு அலுவலர் ராதாகிருஷ்ணன்,கோட்டமேலாளர் ஜோதிமணிகண்டன்,கிளை மேலாளர் சுப்பிரமணி ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து வால்பாறை பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.சோலையார்அணைக்கு வரும் தண்ணீரின் அளவு சற்று குறைந்து கிட்டத்தட்ட 3000 கனஅடியாக இருந்து வருகிறது.அணையிலிருந்து சோலையார் மின்நிலையம்-1 இயக்கப்பட்டு 572 கனஅடித்தண்ணீரும்,சேடல்பாதை வழியாக 1685 கனஅடித்தண்ணீரும் பரம்பிக்குளம் அணைக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.சோலையார் மின்நிலையம்-2 இயக்கப்பட்டு 396 கனஅடித்தண்ணீர் கேரளாவிற்கும் திறந்துவிடப்பட்டுவருகிறது.சோலையார்அணையின் நீர்மட்டம் 163 அடியாக இருந்து வருகிறது.

கடந்த 24 மணிநேரத்தில் வால்பாறையில் 14 மி.மீ.மழையும், சோலையார்அணையில் 18 மி.மீ.மழையும், நீராரில் 19 மி.மீ.மழையும், சின்னக்கல்லாரில் 19 மி.மீ.மழையும் பெய்துள்ளது.தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு கனமழைபெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

Next Story