மத்திய பல்கலைக்கழக மாணவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதை கண்டித்து கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம்


மத்திய பல்கலைக்கழக மாணவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதை கண்டித்து கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம்
x
தினத்தந்தி 13 Aug 2019 11:00 PM GMT (Updated: 13 Aug 2019 6:40 PM GMT)

மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் 30 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியதை கண்டித்து திருவாரூரில் அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதாக கடந்த 6-ந்தேதி மாநிலங்களவையில் மத்திய மந்திரி அமித்ஷா அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளும், இஸ்லாமிய அமைப்பினரும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக சுவரொட்டி ஒட்டியதாக பல்கலைக்கழக மாணவர்கள் 30 பேரிடம் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு விளக்கம் கேட்டு பல்கலைக்கழக நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது.

உள்ளிருப்பு போராட்டம்

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க கிளை தலைவர் அஜித் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் சிவா முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் சுர்ஜித், துணைச் செயலாளர் சந்தோஷ் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர். இதில் திரளானன கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story