சார்ஜாவில் இருந்து சென்னைக்கு ரூ.33 லட்சம் தங்கம் கடத்தல்


சார்ஜாவில் இருந்து சென்னைக்கு ரூ.33 லட்சம் தங்கம் கடத்தல்
x
தினத்தந்தி 14 Aug 2019 3:45 AM IST (Updated: 14 Aug 2019 1:09 AM IST)
t-max-icont-min-icon

சார்ஜாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு ரூ.33 லட்சம் தங்கம் கடத்தி வந்த 2 பேரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து வரும் விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது, சார்ஜாவில் இருந்து திருவனந்தபுரம் வழியாக விமானம் வந்தது. இந்த விமானத்தில் இருந்து திருவனந்தபுரத்தை சேர்ந்த கமரூதீன்(வயது 27), ரகீலா (39) ஆகியோர் வந்து இறங்கினர்.

திருவனந்தபுரத்தில் இருந்து உள்நாட்டு பயணியாக வந்து இறங்கிய இவர்கள் மீது சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள் 2 பேரும் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடமைகளை சோதனை செய்தனர்.

பின்னர் அவர்கள் 2 பேரையும் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தபோது, உள்ளாடைக்குள் தங்க நகைகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து, அவர்களிடம் இருந்து 3 தங்க சங்கிலிகள், 4 மோதிரங்கள் ஆகியற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.

ரூ.33 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 872 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story