ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடியாக குறைந்தது


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
x
தினத்தந்தி 13 Aug 2019 10:30 PM GMT (Updated: 13 Aug 2019 8:53 PM GMT)

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

பென்னாகரம்,

கர்நாடகம், கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் நிரம்பின. இதனால் இந்த 2 அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு வினாடிக்கு 3 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு 7 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 3 லட்சம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

இந்தநிலையில் கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் மழை அளவு குறைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்பட்ட உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறையத்தொடங்கியது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து மதியம் 2 மணி நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கனஅடியாக குறைந்து இரவு 7 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் அதிகரித்ததால் மெயின் அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மெயின் அருவி, நடைபாதையில் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பிகள், தொங்கு பாலம் ஆகியவை சேதம் அடைந்தன. மேலும் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளான சத்திரம், ஊட்டமலை, நாடார் கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் புகுந்த வீடுகளில் சேறும், சகதியுமாக காணப்பட்டது. மேலும் நடைபாதை பகுதியில் வெள்ளத்தால் அடித்துவரப்பட்ட மரங்கள் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.

ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரங்களில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் மீன் மார்க்கெட் மற்றும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை நேற்றும் தொடர்ந்து நீடித்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தாலும் போலீசார், ஊர்க்காவல் படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Next Story