மதுரை அருகே கார் கவிழ்ந்து விபத்து: உறவினருடன் என்ஜினீயர் பரிதாப சாவு


மதுரை அருகே கார் கவிழ்ந்து விபத்து: உறவினருடன் என்ஜினீயர் பரிதாப சாவு
x
தினத்தந்தி 14 Aug 2019 3:45 AM IST (Updated: 14 Aug 2019 2:23 AM IST)
t-max-icont-min-icon

மதுரை அருகே கார் கவிழ்ந்த விபத்தில் உறவினருடன் என்ஜினீயர் பரிதாபமாக இறந்துபோனார். அவரது மனைவி, 2 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.

மதுரை,

சிவகங்கை மாவட்டம் பச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் அழகுராஜா(வயது 30), வெளிநாட்டில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அழகுமுத்து(26). இவர்களுக்கு ரூபிகா(8), ரூகேஷ்(2) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். வெளிநாட்டில் இருந்து சமீபத்தில் தான் அழகுராஜா சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அவர், தனது குடும்பத்தினருடன் மதுரையில் உள்ள தியேட்டரில் சினிமா பார்க்க செல்ல முடிவு செய்தார். இதையடுத்து அழகுராஜா, அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் மைத்துனர் பரத் (22) ஆகியோர் காரில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

மதுரையை அடுத்த அனஞ்சியூர் விலக்கு அருகே அவர்கள் சென்றபோது, திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. ஒரு கட்டத்தில் அந்த கார் ரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் சென்ற அழகுராஜா, மைத்துனர் பரத் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சிலைமான் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பின்னர் அவர்கள், காரில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த அழகுமுத்து, குழந்தைகள் ரூபிகா, ரூகேஷ் ஆகியோரை படுகாயத்துடன் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இறந்த அழகுராஜா, பரத் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
1 More update

Next Story