கன்னிவாடியில் கோவில் நிலத்தை தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு; சப்-கலெக்டரிடம் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் புகார் மனு


கன்னிவாடியில் கோவில் நிலத்தை தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு; சப்-கலெக்டரிடம் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் புகார் மனு
x
தினத்தந்தி 14 Aug 2019 10:30 PM GMT (Updated: 2019-08-15T00:35:37+05:30)

கன்னிவாடியில் கோவில் நிலத்தை தனியார் நிறுவனம் ஆக்கிரமித்ததாக சப்-கலெக்டரிடம் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் புகார் மனு அளித்து உள்ளனர்.

தாராபுரம்,

தாராபுரம் அருகே உள்ள கன்னிவாடி கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆதிநாராயணன் கோவில் உள்ளது. இந்த கோவிலைச்சுற்றி சுமார் 1 ஏக்கர் பரப்பளவிற்கு காலி இடம் உள்ளது. கோவில் திருவிழாவின் போது, பக்தர்கள் ஒன்று சேர்ந்து அந்த இடத்தில் தான் அனைத்து நிகழ்ச்சிகளையும் நடத்துவது வழக்கம். எனவே அந்த கோவில் இடத்தை வேலி அமைத்து, அப்பகுதி மக்கள் பாதுகாத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தனியார் காற்றாலை நிறுவனத்தை சேர்ந்தவர்கள், கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, அதில் வாகனங்கள் சென்று வருவதற்காக சாலை அமைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில். கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கோவில் நிலத்தை மீட்டு தருமாறு, தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில், மாவட்ட செயலாளர் ரமே‌‌ஷ், தாராபுரம் சப்-கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

கன்னவாடியில் உள்ள பழமைவாய்ந்த ஆதிநாராயணன் கோவில், தற்போது இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. கோவிலை சுற்றியுள்ள காலியிடம் கோவிலுக்கு சொந்தமானது என்பதால், அந்த இடத்தை பக்தர்கள் தங்கள் செலவில் வேலி அமைத்து பாதுகாத்து வருகிறார்கள். கோவிலில் திருவிழா நடைபெறும் போது. சுமார் ஒரு வார காலத்திற்கு கோவிலைச் சுற்றியுள்ள காலியிடத்தில் தான், அனைத்து நிகழ்ச்சிகளையும் நடத்துவது வழக்கம்.

இந்த நிலையில் சில தனியார் காற்றாலை நிறுவனங்கள், இந்த பகுதியில் காற்றாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். காற்றாலைக்கு தேவையான உதிரிபாகங்கள், வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. வாகனங்கள் சென்று வருவதற்கு சாலை வசதி இல்லை. இதனால் தனியார் நிறுவனங்கள் இந்த பகுதியில் சாலை அமைப்பதற்காக, எந்தவித அனுமதியும் இல்லாமல், கோவில் நிலத்தில் இருந்த கம்பி வேலிகளை அப்புறப்படுத்திவிட்டு, அங்கு சாலை அமைத்துள்ளார்கள்.

இதனால் எதிர்காலத்தில் கோவில் திருவிழா நிகழ்ச்சிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்படும். மேலும் கோவில் நிலம் ஆக்கிரமிப்பில் மூழ்கிவிடும். எனவே தனியார் காற்றாலை நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ள கோவில் நிலத்தை உடனடியாக மீட்டு, சட்டவிரோதமாக கோவில் நிலத்தில் சாலை அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story