சுதந்திர தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு


சுதந்திர தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு
x
தினத்தந்தி 14 Aug 2019 11:00 PM GMT (Updated: 14 Aug 2019 7:52 PM GMT)

சுதந்திர தின விழாவையொட்டி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திண்டுக்கல்,

நாடு முழுவதும் இன்று சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கில் சுதந்திர தினவிழா நடைபெறுகிறது. இதில் காலை 9.05 மணிக்கு கலெக்டர் விஜயலட்சுமி தேசிய கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார்.

இதன்பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்கள் மற்றும் போலீசாருக்கு பாராட்டு சான்று மற்றும் பதக்கங்களை கலெக்டர் வழங்குகிறார். இதையடுத்து பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன.

இதையொட்டி மாவட்ட விளையாட்டு அரங்கில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சிறப்பு அதிரடிப்படை, ஆயுதப்படை போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதுதவிர மாவட்டம் முழுவதும் பஸ்நிலையங்கள், ரெயில் நிலையங்கள், முக்கிய வழிபாட்டு தலங்களில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் பஸ் மற்றும் ரெயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டு வரும் உடைமைகள் முழுமையாக சோதனை செய்யப்படுகின்றன. மோப்பநாய், மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் வாகன நிறுத்துமிடங்களில் சோதனை நடத்தப்படுகிறது. மேலும் 25 முக்கிய இடங்களில் ரெயில் தண்டவாளங்களில் போலீசார் ரோந்து செல்கின்றனர். அதேபோல் தங்கும் விடுதிகளில் 8 தனிப்படை போலீசார் சோதனை நடத்துகின்றனர்.

அதேநேரம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாவோயிஸ்டுகள் பதுங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை தடுக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசிங் தலைமையிலான நக்சல் தடுப்பு படை போலீசார் வனப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம் மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story