திருப்புவனம் வைகை ஆற்றுப்பகுதியில் இருந்து அருப்புக்கோட்டை நகராட்சிக்கு வரும் குடிநீர் மாசுபட்டுள்ளதாக புகார்; வழக்கு தொடர்ந்துள்ளதாக எம்.எல்.ஏ. தகவல்


திருப்புவனம் வைகை ஆற்றுப்பகுதியில் இருந்து அருப்புக்கோட்டை நகராட்சிக்கு வரும் குடிநீர் மாசுபட்டுள்ளதாக புகார்; வழக்கு தொடர்ந்துள்ளதாக எம்.எல்.ஏ. தகவல்
x
தினத்தந்தி 14 Aug 2019 10:45 PM GMT (Updated: 14 Aug 2019 9:14 PM GMT)

திருப்புவனம் வைகை ஆற்றில் இருந்து அருப்புக்கோட்டை நகராட்சிக்கு வரும் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக புகார் எழுந்துள்ளதால் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை நகராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய கடந்த 1970-ம் ஆண்டு திருப்புவனம் வைகை ஆற்றில் 3 ஏக்கர் நிலப்பரப்பில் அரசு இடம் கொடுத்தது. அந்த இடங்களை சுற்றிலும் 3 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, அதில் இருந்து கிடைக்க பெற்ற தண்ணீரை மின் மோட்டார் மூலம் குழாய்கள் வழியாக அருப்புக்கோட்டை நகரில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் ஏற்றி பின்னர் வார்டு வாரியாக குடிநீர் வினியோகம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக வைகை ஆற்றுப் பகுதியில் இருந்து வரும் குடிநீருடன் கழிவுநீர் கலந்து மாசு அடைந்து வருவதால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக பொதுமக்கள், குடியிருப்போர் நலச்சங்கம் ஆகியோர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.விடம் புகார் மனு அளித்திருந்தனர்.

இது குறித்து சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கூறுகையில், “வைகை ஆற்றுகுடிநீர் மாசுபடுவதாக வந்த புகாரில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் திருப்புவனம் வைகை ஆற்றில் அருப்புக்கோட்டை நகருக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளை சுற்றி பேரூராட்சி நிர்வாகம் காய்கறி சந்தை, ஆடு, மாடு சந்தைகள் உருவாக்கியுள்ளது.

இதற்காக நகராட்சி நிர்வாகத்திடம் எந்தவித அனுமதியும் பெறவில்லை. மேலும் இந்த இடத்தை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதாலும், காய்கறி கழிவுகளை ஆங்காங்கே கொட்டுவதாலும் குடிநீர் மாசுபட்டு உள்ளது என்றும், மேலும் காய்கறி, ஆட்டுச்சந்தைகளை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி சிவகங்கை கலெக்டர், திருப்புவனம் தாசில்தார், பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளதாகவும் கூறினர்.

இந்த நிலையில் முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப்பிரகாசம் இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளாார். இது தொடர்பான வழக்கு வருகிற 27-ந்தேதி விசாரணைக்கு வர உள்ளது” என்றார்.

Next Story