சூனாம்பேடு அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை


சூனாம்பேடு அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை
x
தினத்தந்தி 14 Aug 2019 11:30 PM GMT (Updated: 14 Aug 2019 9:48 PM GMT)

சூனாம்பேடு அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்டார்.

மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் சூனாம்பேடு காலனி பகுதியை சேர்ந்தவர் வேலு (வயது 37). விடுதலை சிறுத்தைகள் கட்சி காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட துணை செயலாளராக இருந்தார். மேலும் இவர் சூனாம்பேடு அடுத்த வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் உப்பு உற்பத்தி தொழிற்சாலையில் ஒப்பந்ததாரராகவும் இருந்தார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் நீண்ட நேரமாக வீட்டுக்கு வரவில்லை. உறவினர்கள் அவரை தேடியபோது சூனாம்பேடு அருகே தாங்கல் என்ற இடத்தில் குளம் அருகே உள்ள வயல்வெளியில் கால்கள் வெட்டப்பட்டு, தலை பகுதி முற்றிலும் சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

இதை பார்த்த பொதுமக்கள் இது குறித்து சூனாம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் தரனேஸ்வரி சம்பவ இடத்திற்கு சென்று வேலு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகிறார்.

வேலு தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் நீலாங்கரைப்பகுதியில் நிறுத்தி வைத்திருந்த கார் கண்ணாடியை உடைத்து ரூ.45 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஆவார். அவர்களிடம் இருந்து போலீசார் ரூ.35 லட்சத்தை மீட்டனர்.

மீதமுள்ள பணத்தை தனது நண்பர்களுடன் பங்கு பிரித்ததில் ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்ததா? அல்லது உப்பு உற்பத்தி தொழிற்சாலை பிரச்சினை, உள்ளிருப்பு போராட்டம், உண்ணாவிரத போராட்டங்கள் போன்றவற்றால் ஏற்பட்ட கொலையா? அல்லது நிலத்தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வேலுவுக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

Next Story