வெள்ள பாதிப்பு: கோலாப்பூர், சாங்கிலி மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்புகிறது


வெள்ள பாதிப்பு: கோலாப்பூர், சாங்கிலி மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்புகிறது
x
தினத்தந்தி 14 Aug 2019 11:45 PM GMT (Updated: 14 Aug 2019 10:01 PM GMT)

வெள்ள பாதிப்பில் இருந்து கோலாப்பூர், சாங்கிலி மாவட்டங்கள் இயல்பு நிலைக்கு திரும்புகிறது.

கோலாப்பூர்,

மாராட்டிய மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக தலைநகர் மும்பை, தானே, பால்கர், நாசிக் மற்றும் மேற்கு மராட்டியத்தை சேர்ந்த கோலாப்பூர், சாங்கிலி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

குறிப்பாக அதிக பாதிப்பை சந்தித்த கோலாப்பூர், சாங்கிலி மாவட்டங்களில் கன மழைக்கு 49 பேர் பலியாகி உள்ளனர். இந்த இரு மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட 6 லட்சத்து 45 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

கிருஷ்ணா மற்றும் பஞ்சகங்கா நதிகளில் வெள்ள அபாய அளவுகளை கடந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. நேற்று வெள்ள அபாய அளவுகளை விட ஆறுகளில் வெள்ளம் குறைந்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் வடிந்து வருகிறது. ஆனாலும் வீடு, உடைகளை இழந்த மக்களின் பரிதவிப்பு தொடருகிறது.

கடந்த 10 நாட்களாக முடங்கி போன மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டு கொண்டு வர அரசு முனைப்பு காட்டி உள்ளது. அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரண உதவி தொகை வழங்கும் பணியும் நடந்து வருகிறது. உணவுபொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் இரு மாவட்டங்களிலும் இயல்பு நிலை மெதுவாக திரும்புகிறது. ஆனாலும் தங்களுக்கு போதிய நிவாரணம் கிடைக்கவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மராட்டியத்தில் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள ரூ.6 ஆயிரத்து 813 கோடியை வழங்குமாறு மத்திய அரசை மராட்டிய அரசு கேட்டுக்கொண்டு உள்ளது.

Next Story