நாகர்கோவில் பஸ் நிலையத்தில் சிறுமியை கடத்திய பெண் கைது பரபரப்பு தகவல்கள்


நாகர்கோவில் பஸ் நிலையத்தில் சிறுமியை கடத்திய பெண் கைது பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 15 Aug 2019 10:00 PM GMT (Updated: 15 Aug 2019 2:53 PM GMT)

நாகர்கோவில் பஸ் நிலையத்தில் சிறுமியை கடத்திய பெண் கைது செய்யப்பட்டார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே தாழக்குடியை சேர்ந்தவர் சடையன். இவர் நாகர்கோவில் மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி தேவி. இவர்களுக்கு 3 வயதில் வீரம்மாள் என்ற மகள் இருக்கிறாள்.

சம்பவத்தன்று தேவி தனது மகளுடன் நாகர்கோவில் வந்தார். இரவு வெகுநேரமானதால் மகளுடன் அவர் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் தூங்கினார். காலையில் எழுந்து பார்த்தபோது மகளை காணவில்லை. இதுகுறித்து கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சிறுமி கடத்தல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின் பேரில் கோட்டார் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டும் காணாமல் போன சிறுமியை தேடி வந்தனர்.

பெண் கைது

சிறுமி கடத்தப்பட்ட நாளில் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் தங்கியிருந்தவர்கள் யார், யார்? என்று விசாரணை நடத்தினர். அப்போது, நெல்லை மாவட்டம் நாங்குனேரி அருகே தோவனேரி பகுதியை சேர்ந்த ராஜி (28) என்ற பெண் தங்கி இருந்தது தெரிய வந்தது. மேலும், சிறுமி காணாமல் போன நாளில் இருந்து அவரும் மாயமாகி இருந்தார். அதனால், போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் தேவனேரிக்கு சென்று, அங்கு பதுங்கியிருந்த ராஜியையும், அவரிடம் இருந்த சடையனின் மகள் வீரம்மாளையும் மீட்டு நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தனர். பின்னர், போலீசார் ராஜியை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Next Story