சென்னை புறநகர் பகுதியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்


சென்னை புறநகர் பகுதியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 16 Aug 2019 4:00 AM IST (Updated: 15 Aug 2019 10:28 PM IST)
t-max-icont-min-icon

சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

செங்குன்றம்,

சென்னை புறநகர் பகுதியான மாதவரம் மண்டல அலுவலகத்தில் மண்டல அதிகாரி தேவேந்திரன் தேசிய கொடி ஏற்றினார். செங்குன்றம் நாரவாரிக்குப்பம் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் சதீஷ் தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார். மாதவரம் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் சரவணன் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

புழலில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஸ்ரீ நல்லழகு நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் சிறுநீரகவியல் துறை தலைவர் டாக்டர் சவுந்தரராஜன் தேசிய கொடியை ஏற்றினார். கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகைகளை சென்னை வாழ் நாடார் சங்க பொதுச்செயலாளர் டி.தங்கமுத்து வழங்கினார். இதில் கல்வி குழு உறுப்பினர் ஜேம்ஸ், சென்னைவாழ் நாடார்கள் சங்க தலைவர் பி.சின்னமணி, கல்லூரி நிர்வாக அதிகாரி எஸ்.கோவிந்தசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

செங்குன்றம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் முத்துவைரவன் தேசிய கொடி ஏற்றினார்.

மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் சமூக சேவகர் கே.என்.சுதாகர் நாயுடு தேசிய கொடி ஏற்றினார். பள்ளி தாளாளர் சந்திரமோகன், சின்னசேக்காடு பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் காசியம்மாள், சி.பா.ஆதித்தனார் பண்பாட்டு கழக தலைவர் ஸ்டீபன், பொதுசெயலாளர் மாரிமுத்து, பொருளாளர் சமுத்திர பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆவடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

சென்னை வால்டாக்ஸ் சாலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா தலைமையில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என எல்லா மதத்தினரும் பங்கேற்ற மதநல்லிணக்க விழா நடந்தது. இதில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர். பின்னர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு துணி மற்றும் காகிதங்களினால் ஆன தேசியகொடி மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

ஓட்டேரி எஸ்.எஸ்.புரத்தில் பள்ளிவாசல் சார்பாக நடந்த விழாவில் போலீஸ் உதவி கமிஷனர் பாலமுருகன் தேசிய கொடியேற்றினார். அயனாவரம் பில்கிங்டன் சாலையில் உள்ள குடியிருப்போர் நலசங்கம் சார்பில் நடைபெற்ற விழாவிலும் அவர் தேசிய கொடியேற்றி இனிப்புகள், பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமான நிலைய ஆணையக இயக்குனர் ஸ்ரீகுமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மத்திய தொழிற்படை போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.


Next Story