திருவாரூர் அருகே பயங்கரம்: எலக்ட்ரீசியன் வெட்டிக்கொலை போலீசார் விசாரணை


திருவாரூர் அருகே பயங்கரம்: எலக்ட்ரீசியன் வெட்டிக்கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 16 Aug 2019 3:45 AM IST (Updated: 15 Aug 2019 11:27 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே எலக்ட்ரீசியன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர்,

திருவாரூர் அருகே அகரதிருநல்லூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேப்பெருமாள். இவருடைய மகன் கருப்பு என்கிற முத்துகிருஷ்ணன் (வயது28). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு முத்துகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் காட்டூரில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்றார். பின்னர் கோவிலில் இருந்து இரவு 11 மணிக்கு வீட்டிற்கு வந்த அவர், வீட்டு் வாசலில் நின்று கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த 5-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் திடீரென தாங்கள் கொண்டு வந்த அரிவாள், கத்தியால் முத்துகிருஷ்ணனை சரமாரியாக வெட்டினர். அப்போது வலி தாங்க முடியாமல் தன்னை காப்பாற்றும்படி அவர் சத்தம்போட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதை பார்த்த மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிள்களில் ஏறி தப்பி சென்றுவிட்டனர்.

சிகிச்சை பலனின்றி சாவு

பின்னர் அக்கம் பக்கத்தினர், தலை, கழுத்து பகுதியில் வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முத்துகிருஷ்ணனை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துகிருஷ்ணன் நேற்று பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சேப்பெருமாள் திருவாரூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் முன் விரோதம் காரணமாக முத்துகிருஷ்ணன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story