மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பெற்றோர்கள் நம்பிக்கையூட்ட வேண்டும் முதன்மை கல்வி அதிகாரி பேச்சு


மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பெற்றோர்கள் நம்பிக்கையூட்ட வேண்டும் முதன்மை கல்வி அதிகாரி பேச்சு
x
தினத்தந்தி 16 Aug 2019 4:30 AM IST (Updated: 16 Aug 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பெற்றோர்களாகிய நீங்கள் நம்பிக்கையூட்ட வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஜயலட்சுமி பேசினார்.

அன்னவாசல்,

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் இலுப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முகாமை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஜயலட்சுமி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர் தங்கள் குழந்தை குறைபாடோடு பிறந்து விட்டதே என கவலைப்படக்கூடாது. ஒவ்வொரு குழந்தையும் சிறந்த குழந்தைகள் தான்.

அவர்களுக்கு பெற்றோர்களாகிய நீங்கள் தான் நம்பிக்கையூட்ட வேண்டும். மாற்றுத்திறனாளி குழந்தைகள் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் சிறந்து விளங்குவார்கள். எனவே பெற்றோர்களாகிய நீங்கள், அவர்களிடம் உள்ள திறமைகளை கண்டறிந்து முறையான பயிற்சி அளித்தால் அவர்களை சிறந்த குழந்தைகளாக மாற்ற முடியும். மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவர்கள் கூறும் பயிற்சியை முறையாக அளிக்க வேண்டும். மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு அரசு வழங்கும் சலுகைகளை பெற்று பயனடைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மருத்துவ பரிசோதனை

தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சின்னத்தம்பி பேசினார். முகாமில் எலும்பு முறிவு மருத்துவர் ஜான், கண் மருத்துவர் சுமதி, காது மூக்கு தொண்டை மருத்துவர் சுதர்சன், மனநல மருத்துவர் ராதிகா, குழந்தைகள் நல மருத்துவர் மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனைகளை செய்து, ஆலோசனைகளை வழங்கினார்கள்.

முகாமில் இலுப்பூர் மாவட்ட கல்வி அதிகாரி ராஜேந்திரன், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல், பள்ளி துணை ஆய்வாளர் வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முகாமிற்கான ஏற்பாடுகளை அன்னவாசல் வட்டார வள மைய மேற்பார்வையாளர் கோவிந்தராஜ் தலைமையில் இயன்முறை மருத்துவர்கள், வட்டார வள மைய பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள் செய்திருந்தனர்.

Next Story