கார் - மொபட் மோதல்: மகன் கண் முன்பு தாய் பலி


கார் - மொபட் மோதல்: மகன் கண் முன்பு தாய் பலி
x
தினத்தந்தி 15 Aug 2019 10:00 PM GMT (Updated: 2019-08-16T02:33:18+05:30)

நெல்லை அருகே கார் - மொபட் மோதிய விபத்தில் மகன் கண் முன்பு தாய் பலியானார்.

நெல்லை, 

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் ஹெர்பந்த். இவருடைய மனைவி லியாகுல் ஜோதி (வயது 45). இவர்களுடைய மகன் அரிஸ்டல் (18). பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர்களது சொந்த ஊர் பொன்னாக்குடி அருகே உள்ள மலையான்குளம் கிராமம் ஆகும். அங்கு நேற்று உறவினர் ஒருவர் இறந்து விட்டார். இதையொட்டி லியாகுல் ஜோதியும், அரிஸ்டலும் ஒரு மொபட்டில் நேற்று மலையான்குளம் கிராமத்துக்கு சென்றனர். அங்கு துஷ்டி கேட்டு விட்டு மீண்டும் இருவரும் பாளையங்கோட்டை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர். மொபட்டை அரிஸ்டல் ஓட்டினார்.

டக்கரம்மாள்புரம் பகுதியில் வந்த போது எதிரே நெல்லையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற காரும், இவர்களது மொபட்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் லியாகுல் ஜோதி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தில் அவரது ஒரு கை துண்டாகி நடு ரோட்டில் விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அரிஸ்டல் உடனடியாக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். மகன் கண் முன்பே தாய் பலியான சம்பவம் மிகவும் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

இந்த விபத்து குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story