டெங்கு, பிளாஸ்டிக் ஒழிப்பை தீவிரமாக செயல்படுத்தி, மாநிலத்திலேயே சிறந்த பேரூராட்சி விருதை வென்றது, டி.கல்லுப்பட்டி


டெங்கு, பிளாஸ்டிக் ஒழிப்பை தீவிரமாக செயல்படுத்தி, மாநிலத்திலேயே சிறந்த பேரூராட்சி விருதை வென்றது, டி.கல்லுப்பட்டி
x
தினத்தந்தி 15 Aug 2019 11:15 PM GMT (Updated: 15 Aug 2019 10:56 PM GMT)

டெங்கு, பிளாஸ்டிக் ஒழிப்பை தீவிரமாக செயல்படுத்தியதால் மாநிலத்திலேயே சிறந்த பேரூராட்சிக்கான விருது டி.கல்லுப்பட்டிக்கு கிடைத்து இருக்கிறது.

பேரையூர்,

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பேரூராட்சிக்கு, மாநிலத்திலேயே சிறந்த பேரூராட்சி என்ற விருது கிடைத்துள்ளது. நேற்று சென்னையில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டி.கல்லுப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சின்னசாமிபாண்டியனுக்கு விருதை வழங்கினார். இதுகுறித்து செயல் அலுவலர் கூறியதாவது:-

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் டி.கல்லுப்பட்டியில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் மண்புழு உரம் தயார் செய்து அவற்றை விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகிறோம். மேலும் பூங்காவில் நடைபெற்று வரும் விவசாய பணிகளுக்கு மண்புழு உரம் போட்டு இயற்கையான முறையில் காய்கறி விளைவித்து விற்பனை செய்து வருகிறோம். மேலும் மரக்கன்று வளர்க்கும் திட்டத்தின்கீழ் பூங்காவிலேயே நர்சரி கார்டன் அமைத்து மரக்கன்று வளர்க்கிறோம். அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங் களில் இதுவரை 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

குடிநீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு கூட்டுக்குடிநீரை கிணற்றில் சேமித்து வைத்து சுகாதாரமான முறையில் பொதுமக்களுக்கு தினசரி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். குறைபாடு குறித்து பொதுமக்கள் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவற்றை அமைக்க உறுதுணையாக இருந்து வருகிறோம்.

இதுதவிர பேரூராட்சி ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் முழு ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியதாலும், பொது சுகாதாரம், டெங்கு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி முழுமையாக செயல்படுத்தியதாலும் டி.கல்லுப்பட்டி பேரூராட்சிக்கு சிறந்த பேரூராட்சி விருது கிடைத்துள்ளது. தற்போது உள்ள பணியை விட மேலும் தொடர்ந்து சிறப்பாக திட்டப்பணிகளை நிறைவேற்றுவோம். மேலும் விருதுடன் கிடைத்த ரூ.10 லட்சத்தை அடிப்படை வசதி திட்டங்களுக்கு பயன்படுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story