சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 94 நிறுவனங்கள் மீது வழக்கு - தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை


சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 94 நிறுவனங்கள் மீது வழக்கு - தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 15 Aug 2019 10:00 PM GMT (Updated: 15 Aug 2019 11:54 PM GMT)

சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 94 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர். ஈரோடு தொழிலாளர் துறை அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஈரோடு,

சுதந்திர தினத்தையொட்டி நேற்று அரசு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை தொழிலாளர் ஆணையாளர் நந்தகோபால் உத்தரவிட்டார். அதன்படி கூடுதல் ஆணையாளர் செந்தில்குமாரி, இணை ஆணையாளர் ரமேஷ் ஆகியோரின் அறிவுரையின்படி, மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வழிகாட்டுதலின்படி, ஈரோடு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) டி.பாலதண்டாயுதம் தலைமையில் அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார்கள். இதில் மாவட்ட துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அல்லது மாற்று விடுப்பு அளிக்கப்பட்டு உள்ளதா? என்று ஆய்வு செய்தனர்.

கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், சில நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காததும், தொழிலாளர்களிடம் முன் அனுமதி பெறாமல் அவர்களை பணியில் அமர்த்தியதும் தெரியவந்தது.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் விடுமுறை அளிக்காத 38 கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், 46 உணவகங்கள், 10 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 94 நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story