மராட்டியத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் மறுவாழ்வு திட்டம் சுதந்திர தின விழாவில் முதல்-மந்திரி பட்னாவிஸ் பேச்சு


மராட்டியத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் மறுவாழ்வு திட்டம் சுதந்திர தின விழாவில் முதல்-மந்திரி பட்னாவிஸ் பேச்சு
x
தினத்தந்தி 16 Aug 2019 12:49 AM GMT (Updated: 16 Aug 2019 12:49 AM GMT)

மராட்டியத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் மறுவாழ்வு திட்டம் செயல்படுத்தப்படும் என சுதந்திரதின விழாவில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உறுதி அளித்தார்.

மும்பை,

நாட்டின் 73-வது சுதந்திர தினத்தையொட்டி மாநில அரசு சார்பில் மாநில தலைமை செயலகம் அமைந்துள்ள மந்திராலயாவில் நடந்த விழாவில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றினார்.

பின்னர் விழாவில் அவர் பேசியதாவது:-

வெள்ளத்தால் வீடு மற்றும் உடைமைகளை இழந்த மக்களுக்கு மாநில அரசு இதுவரை யாராலும் செய்ய முடியாத அளவுக்கு விரைவில் மறுவாழ்வு அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தி கொள்கிறேன். ரூ.6 ஆயிரத்து 800 கோடி அளவில் மறுவாழ்வு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. வெள்ளப்பாதிப்புகளில் சிக்கியவர்களை மீட்கவும் மற்றும் பல்வேறு வகையில் உதவிய மக்களுக்கு நன்றி.

தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், கடற்படை, விமானப்படை, ராணுவம், கடலோர காவல்படையினர் என பல்வேறு தரப்பினர் வெள்ளத்தில் சிக்கிய 5 லட்சத்திற்கும் அதிகமான மக்களை கடந்த 10 முதல் 15 நாட்களில் பத்திரமாக மீட்டு வந்தனர்.

மேற்கு மராட்டியத்தின் கோலாப்பூர் மற்றும் சாங்கிலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 50 பேர் வெள்ளத்திற்கு பலியாகி உள்ளனர். மாநில அரசு வேளாண்துறையில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்து உள்ளது. விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் மானியம் வழங்க ரூ.50 ஆயிரம் கோடி அவர்களின் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக மாநிலத்தில் வறட்சி நிலவி வருகிறது. மராட்டியத்தை வறட்சியில்லா மாநிலமாக மாற்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். கொங்கனில் கடலில் கலந்து வீணாகும் நீரை வடக்கு மராட்டியம் மற்றும் மரத்வாடாவிற்கு கொண்டு செல்லும் பணிகள் நடக்கிறது. வாய்ன்கங்கா நதி வீணாக கடலில் கலப்பதை தடுக்க வாய்ன்கங்கா-நல்கங்கா இடையே கால்வாய் வெட்டப்பட உள்ளது.

இதன் மூலம் விதர்பா வறட்சி இல்லா பகுதியாக மாறும். கொங்கனில் இருந்து 167 டி.எம்.சி. தண்ணீரை கோதாவரி ஆறு மற்றும் வாய்ன்கங்கா வழியாக விதர்பாவுக்கு கொண்டு செல்ல 480 கி.மீ. நீளத்துக்கு சுரங்க கால்வாய் அமைக்கப்பட உள்ளது. மேற்கு மராட்டிய பகுதியில் மத்திய அரசு உதவியுடன் பல்வேறு நீர்மேலாண்மை திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

இதேபோல தொழில் மற்றும் சமூகநீதியிலும் மராட்டியம் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. நாட்டின் அந்நிய முதலீட்டில் 50 சதவீதத்திற்கு மேல் மராட்டியம் வசம் உள்ளது. பிரதமர் மோடியின் கனவு திட்டமான நாட்டின் 5 டிரில்லியம் பொருளாதாரத்தில் மராட்டியத்தின் பங்கு 1 டிரில்லியனாக இருக்கும்.

சுதந்திர தினத்தன்று மராட்டியத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வோம் என உறுதி ஏற்போம். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story