தீவன சோளம்-தட்டைப்பயிறு உற்பத்தி செய்ய 100 சதவீத மானியத்தில் விதைகள் கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்


தீவன சோளம்-தட்டைப்பயிறு உற்பத்தி செய்ய 100 சதவீத மானியத்தில் விதைகள் கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்
x
தினத்தந்தி 18 Aug 2019 4:30 AM IST (Updated: 18 Aug 2019 12:30 AM IST)
t-max-icont-min-icon

தீவன சோளம் மற்றும் தட்டைப்பயிறு உற்பத்தி செய்ய 100 சதவீத மானியத்தில் விதைகள் வழங்கப்படும் என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில், கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் நடப்பு நிதியாண்டில் கூடுதல் தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெறும் வகையில், 700 ஏக்கர் நிலப்பரப்பில் தீவன பயிர் சாகுபடி செய்ய செயல் திட்ட இலக்கு நிர்ணயம் செய்து பெறப்பட்டு உள்ளது. கால்நடை வளர்ப்பிற்கு பசுந்தீவனம் மிகவும் இன்றியமையாதது.

தீவன பற்றாக்குறையை சமாளிக்கவும், நிலையான பசுந்தீவனம் உற்பத்தி செய்யவும் அரசு மானியங்களை அறிவித்து தீவன உற்பத்திகளை ஊக்குவித்து வருகிறது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இறவை மற்றும் மானாவாரியில் தீவன சோளம் மற்றும் தட்டைப்பயிறு உற்பத்தி செய்ய 700 ஏக்கருக்கு மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 0.25 ஏக்கருக்கு 3 கிலோ தீவன சோளம் விதைகளும், 1 கிலோ தட்டைப்பயிறு விதைகளும், அதற்கான யூரியா, பொட்டாஷ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் போன்ற உரங்களும் மானியமாக வழங்கப்பட உள்ளன.

100 சதவீத மானியத்தில் விதைகள்

இத்திட்டத்தில் ஒரு விவசாயி குறைந்தபட்சம் 0.25 ஏக்கர் நிலப்பரப்பிலும், அதிகபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பிலும் தீவன பயிர் சாகுபடி செய்ய, 100 சதவீத மானியத்தில் தீவன பயிர் விதைகள் வழங்கப்படும். விலையில்லா கறவை பசுக்கள் திட்டத்தில் பயன்பெற்ற பயனாளிகள், சிறு, குறு விவசாயிகள், ஆவின் பயனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இனம் வாரியாக 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எனவே இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விருப்பம் உள்ள, கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை நேரில் தொடர்பு கொண்டு, பயன்பெற எழுத்து மூலமாக விண்ணப்பம் அளித்து தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்து உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மட்டுமே மானியம் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story