தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் அதிகாரி தகவல்


தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 17 Aug 2019 10:30 PM GMT (Updated: 17 Aug 2019 7:17 PM GMT)

தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (பொறுப்பு) கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார்.

கரூர்,

தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரிகிற மற்றும் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, கல்வி ஊக்கத்தொகை வழங்குவது குறித்து திட்டங்கள் அமல்படுத்த பட்டுள்ளன.

அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி சேர்த்து ரூ.25 ஆயிரம் வரை ஊதியமாக பெறும் தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கல்வி உதவித்தொகையாக ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கும் பொறியியல், மருத்துவம், சட்டம், ஆசிரியர் பயிற்சி, விவசாயம், உடற்பயிற்சி ஆகிய படிப்புகளுக்கு பட்டய படிப்பு முதல் பட்டமேற்படிப்பு வரை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையும் மற்றும் மேல்நிலை கல்வி மற்றும் தொழிற்பயிற்சி கல்விக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படுகிறது.

பயன்பெறலாம்

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கல்வி மாவட்டங்களிலும் அரசு பொது தேர்வில் முதல் 10 இடங்களை வகிக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பிற்கு ரூ.2 ஆயிரமும், பிளஸ்-2 வகுப்புக்கு ரூ.3 ஆயிரமும், கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. புத்தகம் வாங்க உதவித்தொகையாக மேல்நிலைக்கல்வி முதல் பட்ட மேற்படிப்பு வரை ரூ.ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

இந்த திட்டங்களுக்கான விண்ணப்பங்களை தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் மூலம் வருகிற டிசம்பர் மாதம் 31-ந்தேதிக்குள் சென்னை தேனாம்பேட்டையிலுள்ள தொழிலாளர் நல வாரிய செயலாளருக்கு அனுப்பி வைத்து கரூர் மாவட்ட தொழிலாளர்கள் பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story