மத்திய அரசின் கடன் திட்ட குறைபாடுகளை களைய இந்தியன் வங்கி கிளை மேலாளர்களுடன் பொது மேலாளர் ஆலோசனை


மத்திய அரசின் கடன் திட்ட குறைபாடுகளை களைய இந்தியன் வங்கி கிளை மேலாளர்களுடன் பொது மேலாளர் ஆலோசனை
x
தினத்தந்தி 17 Aug 2019 10:45 PM GMT (Updated: 17 Aug 2019 7:24 PM GMT)

மத்திய அரசின் கடன் திட்ட குறைபாடுகளை களைய இந்தியன் வங்கி கிளை மேலாளர்களுடன் பொது மேலாளர் ராமு திருச்சியில் ஆலோசனை நடத்தினார்.

திருச்சி,

திருச்சி ஜென்னிபிளாசாவில் உள்ள இந்தியன் வங்கி மண்டல அலுவலகத்தில் கிளை மேலாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. பொதுமேலாளர் (சென்னை) ராமு, கிளை மேலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் மத்திய அரசின் சிறு தொழில் கடன்கள், முத்ரா கடன் திட்டம், வீட்டு கடன் உள்ளிட்ட கடன் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டம் குறித்து பொதுமேலாளர் ராமு நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசின் கடன் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக சென்றடைந்துள்ளதா? இதில் என்ன குறைபாடுகள் உள்ளது என்பது குறித்தும், அதனை களைவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் இத்திட்டங்கள் சிறப்பாக மக்களை சென்றடைய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. நாடு முழுவதும் இந்தியன் வங்கி கிளையில் இதேபோன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின் முடிவுகள் நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்படும். அதன்பின் கடன் திட்டங்களில் மாற்றம் எதுவும் கொண்டு வர முயன்றால் அதனை மத்திய அரசு மேற்கொள்ளும். வங்கிகளில் வாராக்கடனை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியன் வங்கிகளில் வாடிக்கையாளர்களின் வைப்பு தொகை சற்று குறைந்துள்ளது.

கடுமையான நடைமுறைகள்

கடன் வழங்குவதற்கு வங்கியில் கடுமையான நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது என கூற முடியாது. சில செயல்திட்ட முறைகள் உள்ளன. அந்த முறையை மேலும் எளிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளில் வாடிக்கையாளர்கள் கடன் வாங்க விண்ணப்பிக்கும் படிவம் ஒரே மாதிரியாக இருக்கும் வகையில் செயல்படுத்த ஒரு குழு அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது திருச்சி மண்டல மேலாளர் சாமிநாதன் உடன் இருந்தார். கூட்டத்தில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து இந்தியன் வங்கி கிளை மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story