இடி- மின்னலுடன் விடிய, விடிய வெளுத்து வாங்கிய மழை; குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது
விழுப்புரம் மாவட்டம் முழுவதும் இடி- மின்னலுடன் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது.
விழுப்புரம்,
இந்நிலையில் விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான கோலியனூர், காணை, வளவனூர், பெரும்பாக்கம், தோகைப்பாடி, கல்பட்டு, சிந்தாமணி, அய்யூர்அகரம், கப்பியாம்புலியூர், குச்சிப்பாளையம், பிடாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு 9.15 மணியில் இருந்து பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை ½ மணி நேரமாக தூறிக்கொண்டே இருந்தது.
அதன் பிறகு சிறிது நேரம் மழை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் இரவு 11 மணி முதல் இடி- மின்னலுடன் கூடிய பலத்த மழையாக பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இடைவிடாமல் 1 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்தது. அதன் பின்னரும் விடிய, விடிய வெளுத்து வாங்கிய கனமழை நேற்று அதிகாலை 5 மணி வரை நீடித்தது.
இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளான சுதாகர் நகர், வீனஸ் நகர், கணேஷ்நகர், கே.கே.நகர், கம்பன் நகர், மணிநகர், பாண்டியன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வர மிகவும் சிரமப்பட்டனர்.
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் பார்ப்பதற்கு ஏரிபோன்று காட்சியளித்தது. இந்த மழைநீரை மின்மோட்டார் மூலம் வெளியேற்ற நகராட்சி நிர்வாகத்தினர் உடனடி நடவடிக்கை எடுக்காததால் பஸ்கள் அனைத்தும் தண்ணீரில் ஊர்ந்தபடி சென்றதை காண முடிந்தது.
அதுமட்டுமின்றி பஸ் நிலையத்தில் உள்ள சாக்கடை கால்வாய்கள் நிரம்பி கழிவுநீர், மழைநீருடன் கலந்ததால் கடும் துர்நாற்றம் வீசியது. இதனால் பஸ் நிலையத்திற்குள் இருந்து பயணிகள் அனைவரும் பஸ்சில் ஏறிச்செல்லாமல் அவதிப்பட்டனர். மாறாக அவர்கள், பஸ் நிலைய நுழைவுவாயிலின் அருகில் நின்றுகொண்டு பஸ்சில் ஏறிச்சென்றனர்.
மேலும் விழுப்புரம் காமராஜ் நகராட்சி பள்ளி மைதானம், ரெயில்வே மைதானம், கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானங்களிலும் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளித்தது. ரெயில் நிலையம் அருகில் உள்ள பழைய சிந்தாமணி தெருவில் கோலியனூரான் வாய்க்கால் நிரம்பி சாக்கடை நீர், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை சுற்றி தேங்கியதால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் இருந்து பானாம்பட்டு சாலை வரை சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீர் தேங்கியது. ஏற்கனவே மந்தகதியில் நடந்து வரும் இந்த பணிகள் மழையின் காரணமாக நேற்று முற்றிலும் தடைபட்டது. விடிய, விடிய கொட்டி தீர்த்த மழை நேற்றும் நீடித்தது. காலை 8 மணியில் இருந்து சாரல் மழையாக தூறிக்கொண்டே இருந்தது. இதனால் மாணவ- மாணவிகள் பள்ளிக்கு குடைபிடித்தபடி சென்றதை காண முடிந்தது.
இந்த மழையின் காரணமாக காணை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்காக அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் 28 இடங்களில் நடைபெறுவதாக இருந்த அடிக்கல் நாட்டு விழாக்கள் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. மேலும் பலத்த மழையினால் கிராமப்புறங்களில் உள்ள விவசாய விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
திண்டிவனம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான மயிலம், கூட்டேரிப்பட்டு உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழை பெய்தது. திண்டிவனம் பகுதியில் பெய்த மழையினால் திண்டிவனம்- புதுச்சேரி சாலை, விழுப்புரம் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளான வகாப் நகரில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கியதால் அப்பகுதி மக்கள் வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் சிரமப்பட்டனர். இதேபோல் மரக்காணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையினால் உப்பளங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.
தியாகதுருகத்தில் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. 11 மணியளவில் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் பேரூராட்சி அலுவலகத்தின் இடைபட்ட பகுதியில் இருந்த ஒரு புளியமரம் வேரோடு சாய்ந்து, அந்த வழியாக சென்ற மின்கம்பிகள் மீது விழுந்தது. எடைதாங்க முடியாமல் அந்த பகுதியில் இருந்த 3 மின்கம்பங்கள் அடுத்தடுத்து விழுந்தன. இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், காந்தி நகர், பெரியமாம்பட்டு, பூக்குளம், செல்வம்நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள் நேரில் சென்று அந்த மரத்தை வெட்டி அகற்றி அப்புறப்படுத்தினர். பின்னர் மின்கம்பங்கள் நடப்பட்டு, நேற்று மாலை 3 மணிக்கு மேல் அந்த பகுதியில் மீண்டும் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது.
இதேபோல் சங்கராபுரம், செஞ்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, மேல்மலையனூர், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர், கள்ளக்குறிச்சி, வானூர், கோட்டக்குப்பம் உள்பட மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. செஞ்சி பஸ் நிலையத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இது பற்றி அறிந்ததும் பேரூராட்சி தொழிலாளர்கள் நேற்று காலையில் பஸ் நிலையத்துக்கு சென்று, அங்குள்ள வாய்க்கால் அடைப்புகளை அகற்றி, தண்ணீர் வடிந்து செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த மழையினால் ஏரிகள், குளங்களுக்கு நீர்வரத்து வரத்தொடங்கியுள்ளது. அதுபோல் மாவட்டத்தில் உள்ள வீடூர், கோமுகி, மணிமுக்தா ஆகிய அணைகளின் நீர்மட்டமும் மெல்ல, மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story