கிசான் மன்தான் யோஜனா திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் கலெக்டர் தகவல்


கிசான் மன்தான் யோஜனா திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 17 Aug 2019 11:00 PM GMT (Updated: 17 Aug 2019 8:07 PM GMT)

கிசான் மன்தான் யோஜனா திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும் என கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்,

சிறு மற்றும் குறு விவசாயிகளின் முதுமை காலத்தை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தர “பிரதம மந்திரி கிசான் மன்தான் யோஜனா“ திட்டம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பதிவு செய்யும் விவசாயிகள் 60 வயதை அடையும் போது அவர்களுக்கான ஓய்வூதியம் ஒவ்வொரு மாதமும் ரூ.3 ஆயிரம் தனது வாழ்நாள் வரை பெறலாம். 18 வயது முதல் 40 வயது வரையிலான சிறு, குறு விவசாயிகள் இந்த திட்டத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

விவசாயிகள் தங்கள் வயதிற்கேற்ப ஒவ்வொரு மாதமும் ரூ.55 முதல் ரூ.200 வரை பொது இ-சேவை மையத்தில் பதிவு செய்து செலுத்த வேண்டும். அதற்கு நிகரான தொகையை மத்திய அரசும் சந்தாதாரர் கணக்கில் செலுத்தும். 61 வயது முதல் மாதந்தோறும் வாழ்நாள் முழுவதும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும். விவசாயிகள் ஓய்வு காலத்திற்கு பின்னர் இந்த வருமானத்தை உறுதி செய்ய இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

பொது சேவை மையம்

ஒரு குடும்பத்தில் உள்ள கணவன், மனைவி என இருவரும் இந்த ஓய்வூதிய திட்டத்தில் தனித்தனியாக இணைந்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் இணைந்த சந்தாதாரர் திட்டத்தை தொடர விருப்பமில்லை என்றால், அவர் கட்டிய தொகையானது 5 ஆண்டுகளுக்கு பிறகு வட்டியுடன் திரும்ப தரப்படும். சந்தாதாரர் திட்ட காலத்திற்கு பிறகு இறக்கும் பட்சத்தில் அவரின் மனைவி அல்லது வாரிசுதாரருக்கு மாதம் ரூ.1,500 வீதம் அவரின் இறுதி காலம் வரை கிடைக்கும். எனவே இந்த திட்டத்தில் விவசாயிகள் இணைய, தங்களது ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்டவற்றுடன் அருகில் உள்ள பொது சேவை மையத்தை அணுகி பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story