நாகர்கோவிலில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட மரக்கடை ஊழியர் கைது


நாகர்கோவிலில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட மரக்கடை ஊழியர் கைது
x
தினத்தந்தி 17 Aug 2019 11:15 PM GMT (Updated: 17 Aug 2019 8:28 PM GMT)

நாகர்கோவிலில் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட மரக்கடை ஊழியரை போலீசார் கைது செய்தனர். மத்திய அரசு ஊழியர் உள்பட 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் பள்ளிவிளையை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 43), மரக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு செட்டிகுளம் பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டருக்கு படம் பார்க்க சென்றார். அப்போது டிக்கெட் வாங்குவதற்காக 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். ஆனால் அந்த ரூபாய் நோட்டு மீது தியேட்டர் ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று ரூபாய் நோட்டை வாங்கி சோதனை செய்தனர். அப்போது ரமேஷ் கொடுத்தது கள்ள ரூபாய் நோட்டு என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ரமேசை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று துருவி, துருவி விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், கலர் ஜெராக்ஸ் எந்திரம் மூலமாக கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டது தெரிய வந்தது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் மேலும் விசாரணை நடத்தினர். அப்போது ரமேஷின் நண்பர்கள் 2 பேருக்கும் தொடர்பு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

நண்பர்களில் ஒருவர் கொச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதைத் தொடர்ந்து நண்பர்களையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

பின்னர் 3 பேரிடமும் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது கூறியதாவது:-

கள்ள நோட்டு விவகாரத்தில் பிடிபட்ட 3 பேரும் கலர் ஜெராக்ஸ் எந்திரத்தை பயன்படுத்தி கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டுள்ளனர். ஜெராக்ஸ் எந்திரம் மத்திய அரசு ஊழியருக்கு சொந்தமானது. அவருக்கு பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே சில கடைகள் உள்ளன. அந்த கடைகளில் கலர் ஜெராக்ஸ் எந்திரத்தை பயன்படுத்தி தொழில் செய்ய அவர் திட்டமிட்டு உள்ளார். இதற்காக ஜெராக்ஸ் எந்திரத்தை சென்னையில் இருந்து ஆர்டர் மூலமாக நாகர்கோவிலுக்கு கொண்டு வந்தார்.

ஆனால் அவர் கொச்சியில் இருப்பதால் அவரால் ஊருக்கு வந்து கடையில் ஜெராக்ஸ் எந்திரத்தை பொருத்த முடியவில்லை. இதனால் ரமேசை தொடர்பு கொண்டு ஜெராக்ஸ் எந்திரத்தை கடையில் பொருத்துமாறு கூறியுள்ளார். ஆனால் ரமேஷ் ஜெராக்ஸ் எந்திரத்தை கடையில் பொருத்தாமல் மற்றொரு நண்பர் வீட்டில் வைத்துள்ளார். பின்னர் 2 பேரும் சேர்ந்து அந்த வீட்டில் ஜெராக்ஸ் எந்திரம் மூலம் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்து உள்ளனர்.

ஜெராக்ஸ் எந்திரம் மூலமாக அச்சடிக்கப்படும் கள்ள ரூபாய் நோட்டுகளை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. எனவே கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்து அதை புழக்கத்தில் விட்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என அவர்கள் நினைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து கள்ள ரூபாய் நோட்டுகளை தயார் செய்துள்ளனர். அவற்றை புழக்கத்தில் விடும் பணியை ரமேஷ் பார்த்துக் கொண்டார். செட்டிகுளத்தில் உள்ள சினிமா தியேட்டரில் ஏற்கனவே 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை ரமேஷ் மாற்றி இருக்கிறார். மேலும் அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்திலும் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை பயன்படுத்தி உள்ளார். இந்தநிலையில் மீண்டும் அதே சினிமா தியேட்டருக்கு சென்று கள்ள ரூபாய் நோட்டை மாற்ற முயன்ற போது போலீசிடம் சிக்கியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கள்ள நோட்டு அச்சிடப்பட்ட வீட்டுக்கு சென்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு கள்ள ரூபாய் நோட்டு அச்சடிக்க பயன்படுத்திய கலர் ஜெராக்ஸ் எந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் புழக்கத்தில் விடுவதற்காக வைத்திருந்த 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் 4-ம், 200 ரூபாய் கள்ள நோட்டு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டன.

அதோடு ரமேசையும் போலீசார் கைது செய்தனர். மத்திய அரசு ஊழியர் மற்றும் ரமேஷின் நண்பர் ஆகிய 2 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நாகர்கோவிலில் கள்ள ரூபாய் நோட்டு அச்சடித்து வினியோகம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story