குளச்சல் அருகே போராட்டம் நடத்த முயன்றவர்களை போலீசார் பிடித்து சென்றதால் பரபரப்பு


குளச்சல் அருகே போராட்டம் நடத்த முயன்றவர்களை போலீசார் பிடித்து சென்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 Aug 2019 10:00 PM GMT (Updated: 18 Aug 2019 4:31 PM GMT)

குளச்சல் அருகே போராட்டம் நடத்த முயன்றவர்களை போலீசார் பிடித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

குளச்சல்,

குளச்சல் அருகே உள்ள சைமன் காலனி ஊராட்சியில் 5 நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் குப்பை சரிவர அகற்றப்படாமலும், தெருவிளக்கு சீராக எரியாமலும் இருந்து வந்தது. சுதந்திர தினத்தையொட்டி நடந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் சீராக குடிநீர் வழங்கி, குப்பையை அகற்றி, தெருவிளக்கு சீராக எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு அதிகாரிகள் அளித்த பதில் பொது மக்களுக்கு திருப்தியளிக்காததால், அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் பாதியிலேயே எழுந்து சென்றனர். இதை கண்டித்து பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், பத்மநாபபுரம் உதவி கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று கூறினார். அதை நம்பி பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

பிடித்து சென்றனர்

உதவி போலீஸ் சூப்பிரண்டு கூறியபடி, நேற்று முன்தினம் பேச்சுவார்த்தைக்கு ஊராட்சி மக்களை அதிகாரி அழைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். அவர்கள் ஊராட்சி அலுவலகம் முன் நள்ளிரவில் திரண்டு முற்றுகை போராட்டம் நடத்த முயன்றனர். இதுபற்றி தகவல் அறிந்ததும், குளச்சல் போலீசார் அங்கு விரைந்து வந்து 5 பேரை பிடித்து சென்றனர்.

இதையறிந்த பொதுமக்கள் பெருமளவில் ஊராட்சி அலுவலகம் முன் திரண்டு, போலீசார் பிடித்து சென்றவர்களை விடுவிக்க வேண்டும் என கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பிடித்து சென்றவர்களை போலீசார் விடுவித்தனர். அதன்பிறகு பொதுமக்கள் ஊராட்சி அலுவலகம் முன்பிருந்து கலைந்து சென்றனர். 

Next Story