மேட்டூர் அணை உபரிநீரை, வலது கரை வாய்க்கால் மூலம் அந்தியூர் பகுதியில் உள்ள ஏரி- குளங்களுக்கு கொண்டு செல்லும் திட்டம்; செயல்படுத்த விவசாயிகள் கோரிக்கை


மேட்டூர் அணை உபரிநீரை, வலது கரை வாய்க்கால் மூலம் அந்தியூர் பகுதியில் உள்ள ஏரி- குளங்களுக்கு கொண்டு செல்லும் திட்டம்; செயல்படுத்த விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 18 Aug 2019 11:00 PM GMT (Updated: 18 Aug 2019 7:24 PM GMT)

மேட்டூர் அணை உபரிநீரை வலது கரை வாய்க்கால் மூலம் அந்தியூர் பகுதியில் உள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அந்தியூர்,

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை 100 அடியை தாண்டிவிட்டது. இதைத்தொடர்ந்து அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. மேலும் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உபரிநீர் திறந்துவிட வாய்ப்புள்ளது. மேலும் மேட்டூர் அணையின் வலதுகரை வாய்காலிலும் பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்படும்.

இந்த வலது கரை வாய்க்கால் மேட்டூரில் இருந்து தொடங்கி பெரும்பள்ளம், சின்னப்பள்ளம், கொமராயனூர், பூதப்பாடி, நெரிஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை, மாணிக்கம்பாளையம், குறிஞ்சி, மைலம்பாடி, ஜம்பை வழியாக பவானி ஆற்றில் கலக்கிறது. ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கும் காலத்தில் வாய்க்காலில் திறந்துவிடப்படும் தண்ணீரானது அப்படியே வீணாக கடலில் சென்று கலக்கிறது.

எனவே அணையின் உபரிநீர் வீணாக கடலில் சென்று கலப்பதை தடுக்கும் வகையில் கொமராயனூர் வழியாக செல்லும் வலது கரை வாய்க்காலை பிரித்து அதில் இருந்து கிளை வாய்க்காலை உருவாக்க வேண்டும். அவ்வாறு உருவாக்கப்படும் கிளை வாய்க்காலானது கொமராயனூரில் இருந்து தொடங்கி பாப்பாத்திக்காடு, சென்னம்பட்டி, குருவரெட்டியூர், புரவிபாளையம், தொப்பம்பாளையம், ரெட்டிபாளையம், சென்ராயனூர், முரளி, ஜர்த்தல், வெள்ளித்திருப்பூர், சொக்கநாதர்மலையூர், காளிப்பட்டி, ஆதிரெட்டியூர், பூசாரியூர், மறவன்குட்டை, விளாங்குட்டை, பட்லூர், நால்ரோடு, பூனாச்சி, ஒலகடம், கொளந்தபாளையம், நாகிரெட்டிபாளையம், முருகக்காரனூர், ஓட்டப்பாளையம், தாளபாளையம், குந்துபாயூர், தாண்டம்பாளையம், பச்சாம்பாளையம், கெமியம்பட்டி, மாத்தூர், வெங்கக்கல்லூர், மாக்கலூர், அட்டவணைப்புதூர், ஆலாம்பாளையம், எண்ணமங்கலம், கோவிலூர், ஆர்.ஜி.கொட்டாய், அந்தியூர், புதுப்பாளையம், தவுட்டுப்பாளையம், நஞ்சமடைக்குட்டை, செல்லம்பாளையம், கரட்டூர், மந்தை, மைக்கேல்பாளையம், சின்னதம்பிபாளையம், அத்தாணி உள்பட 300-க்கும் மேற்பட்ட கிராமங்களின் வழியாக சென்று பவானி ஆற்றில் இணையவேண்டும்.

இதன் மூலம் உபரிநீர் வீணாகாமல் அந்தியூர் பகுதியில் உள்ள 24 ஏரி மற்றும் 43 குளங்களுக்கு கொண்டு செல்லப்படும். இதனால் 300-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 75 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்சினையும் தீரும். அதுமட்டுமின்றி அந்தியூர் பகுதியில் விவசாய வேலை அதிகரிப்பதோடு, கால்நடை வளர்ப்பு, ஏரி மற்றும் குளங்களில் மீன் வளர்ப்பு போன்றவையும் பெருகும். எனவே மேட்டூர் அணை உபரிநீரை வலது கரை வாய்க்கால் மூலம் அந்தியூர் பகுதியில் உள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story