புதிய பாலம் கட்டுமான பணியால் புள்ளம்பாடி வாய்க்காலில் வந்த தண்ணீர் தடுத்து நிறுத்தம்


புதிய பாலம் கட்டுமான பணியால் புள்ளம்பாடி வாய்க்காலில் வந்த தண்ணீர் தடுத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 18 Aug 2019 11:00 PM GMT (Updated: 18 Aug 2019 8:51 PM GMT)

புதிய பாலம் கட்டுமான பணியில் ஏற்பட்ட தாமதத்தால் புள்ளம்பாடி வாய்க்காலில் இருந்து வந்த தண்ணீரை தடுத்து நிறுத்தி தேக்கி வைத்துள்ளனர்.

சமயபுரம்,

மண்ணச்சநல்லூரில் இருந்து திருப்பைஞ்சீலி செல்லும் சாலையில் உளுந்தங்குடி மற்றும் அழகிய மணவாளம் செல்லும் வழியில் உள்ள பழைய பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் முக்கொம்புக்கு வந்தடைந்தது.

வழக்கமாக வாத்தலையில் இருந்து புள்ளம்பாடி வாய்க்காலில் விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அப்படி திறக்கப்படும் தண்ணீர் மூலம் புள்ளம்பாடி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உள்ள சுமார் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

தடுத்து நிறுத்தம்

இந்தநிலையில் நேற்று காலை புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அழகிய மணவாளத்தில் பாலம் கட்டும் இடம் அருகே வந்த தண்ணீரை வாய்க்காலின் குறுக்கே மணலை போட்டு தடுத்து நிறுத்தி, தேக்கி வைத்தனர். இதன் காரணமாக தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாலம் கட்டுமான பணிக்கு இடையூறாக இருக்கும் என்று கருதி தண்ணீரை தேக்கி வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பாலம் கட்ட பல மாதங்களுக்கு முன்பே டெண்டர் விடப்பட்டது. இருப்பினும் கட்டுமானப்பணியில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் இது நடந்துள்ளது என்றும் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். இதுபற்றி வாத்தலை பொதுப்பணித்துறை அதிகாரியிடம் கேட்ட போது, புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீரை திறப்பதற்கென்று அரசாணை உள்ளது. இன்னும் முறையாக வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படவில்லை. வாத்தலையில் இருந்து வரும் கசிவு நீர் வாய்க்காலில் சென்று கொண்டிருக்கும், என்று கூறினார்.

பொதுமக்கள் குடிநீருக்கே அவதிப்படும் நிலையில், ஓடிக் கொண்டிருக்கும் தண்ணீரை தடுத்திருப்பது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story