மதுரையில் மாணவர் விடுதி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது; அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் உயிர் தப்பினர்


மதுரையில் மாணவர் விடுதி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது; அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 19 Aug 2019 4:45 AM IST (Updated: 19 Aug 2019 4:10 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் அரசு மாணவர் விடுதி கட்டிடத்தின் மேற்கூரை நேற்று திடீரென இடிந்து விழுந்தது. பல மாதங்களாக சேதமடைந்த கட்டிடத்தை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அதிகாரிகள் மீது மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மதுரை,

மதுரை சாத்தமங்கலம் பகுதியில் பிற்படுத்தப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கான அரசு விடுதி உள்ளது. இங்கு பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் 119 மாணவர்கள் தங்கியுள்ளனர். மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் இந்த மாணவர்கள் இங்கு வந்து தங்கி, கல்லூரிக்கு சென்று வருகின்றனர். இங்குள்ள கட்டிடம் கடந்த 1967-ம் ஆண்டு கட்டப்பட்டது.

இந்த கட்டிடத்தின் சமையல்கூடம் மற்றும் மாணவர்கள் உணவு அருந்தும் பகுதியில் கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்து காணப்பட்டது. பல மாதங்களாக இதே நிலை நீடித்தது. ஆனாலும் சம்பந்தப்பட்டவர்கள் இந்த கட்டிடத்தை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தநிலையில் நேற்று மாலை மதுரையில் பலத்த மழை பெய்தது. இதில் சாத்தமங்கலத்தில் சேதமடைந்து காணப்பட்ட அரசு மாணவர் விடுதி கட்டிடத்தின் ஒரு பகுதி மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுவதை அங்கிருந்த சில மாணவர்கள் தங்களது செல்போன்களில் வீடியோ பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அவர்கள் கூறுகையில், கடந்த சில மாதங்களாகவே விடுதி கட்டிடத்தின் ஒரு பகுதி மேற்கூரை சேதமடைந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் தான் இருந்தது. இதை சரி செய்யும்படி உரிய அதிகாரிகளிடம் முறையிட்டோம். ஆனாலும் இதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது பற்றிய தகவல் அறிந்தும் அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்துக்கு வரவே இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், விடுதி வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். ஆனாலும் தண்ணீர் வசதி செய்யப்படாததால் அந்த கட்டிடம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. அந்த கட்டிடத்தை திறந்து மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் முன் வர வேண்டும் என்றும் அந்த மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து விடுதி காப்பாளர் ஸ்ரீதர் கூறுகையில், “மாணவர் விடுதிக்கட்டிடத்தை மராமத்து செய்ய வேண்டும் என்று பலமுறை உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினேன். பொதுப்பணித்துறையினர் இந்த கட்டிடத்தை ஆய்வு மட்டுமே செய்துள்ளனர். அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கவே இல்லை.

மேற்கூரை இடிந்ததால் சமையல் அடுப்புகள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டன.

இதனால் மாணவர்களுக்கு உணவு தயார் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

Next Story