டேங்கர் லாரி தீப்பற்றி எரிந்ததில் டிரைவர் உடல் கருகி பலி - 12 ஆயிரம் லிட்டர் பால் வீணாகியது


டேங்கர் லாரி தீப்பற்றி எரிந்ததில் டிரைவர் உடல் கருகி பலி - 12 ஆயிரம் லிட்டர் பால் வீணாகியது
x
தினத்தந்தி 19 Aug 2019 4:00 AM IST (Updated: 19 Aug 2019 4:36 AM IST)
t-max-icont-min-icon

பால் லோடு ஏற்றி வந்த டேங்கர் லாரி பாலத்தில் இருந்து தலைகுப்புற கவிழ்ந்து தீப்பற்றி எரிந்தது. இதில் உடல் கருகி டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 12 ஆயிரம் லிட்டர் பால் வீணாகியது. ஆத்தூர் அருகே நடந்த இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

ஆத்தூர்,

திருவண்ணாமலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு பால் குளிரூட்டும் நிலையத்தில் இருந்து 12 ஆயிரம் லிட்டர் பால் லோடு ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் டேங்கர் லாரி ஒன்று சேலம் மாவட்டத்துக்கு வந்தது. டேங்கர் லாரியை வாழப்பாடி அருகே உள்ள முத்தம்பட்டி கிழக்கு காடு பகுதியைச் சேர்ந்த டிரைவர் ஆனந்த் (வயது 23) என்பவர் ஓட்டி வந்தார்.

வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பால் கொள் முதல் நிலையத்திற்கு டேங்கர் லாரி வந்து கொண்டிருந்தது. நேற்று அதிகாலை 3½ மணியளவில் ஆத்தூர் அருகே உள்ள அப்பமசமுத்திரம் புறவழிச்சாலை பாலம் அருகே வரும் போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய டேங்கர் லாரி, பாலத்தின் மேலே இருந்து கீழே தலைகுப்புற கவிழ்ந்து விழுந்தது.

இதில் டேங்கர் லாரியில் இருந்த 12 ஆயிரம் லிட்டர் பால் கொட்டி வீணானது. அதே நேரத்தில் 30 அடி உயரத்தில் இருந்து விழுந்ததால் டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்தது. தீ விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய டேங்கர் லாரி டிரைவர் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தார்.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், ஆத்தூர் தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து சென்று டேங்கர் லாரியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். விபத்து குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story