மாவட்ட செய்திகள்

நீர்மட்டம் உயர்வு, மேட்டூர் அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் + "||" + Water level rise, Tourists piled into Mettur Dam

நீர்மட்டம் உயர்வு, மேட்டூர் அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

நீர்மட்டம் உயர்வு, மேட்டூர் அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வால் மேட்டூருக்கு சுற்றுலா பயணிகள் நேற்று அதிகளவில் வந்து குவிந்தனர்.
மேட்டூர்,

கர்நாடகம் மற்றும் கேரள மாநிலத்தில் பெய்த மழையின் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் கடந்த மாதம் நிரம்பியது. இதையடுத்து இந்த அணைகளுக்கு வரத்து நீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக மாநில எல்லைப்பகுதியான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைந்தது. இந்த நீர்வரத்தின் காரணமாக அணையின் நீர்மட்டம் மளமளவென்று உயர்ந்து நேற்று இரவு 114 அடியை எட்டியது.

இதனிடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும், நீர்மட்டம் உயர்வால் கடல் போல் காட்சி அளிக்கும் மேட்டூர் அணையின் அழகை ரசிப்பதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மேட்டூருக்கு வந்திருந்தனர். இவர்கள் அணையின் இடதுகரை பகுதியான 16 கண் பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலிக்கு பின்பு நின்று அணையின் அழகை ரசித்தனர்.

ஒரு சிலர் அணையின் வலதுகரை பகுதியில் அமைந்துள்ள பவளவிழா கோபுரத்திற்கு சென்று அணையில் தண்ணீர் நிரம்பி நிற்கும் எழில்காட்சியை கண்டு ரசித்தனர். இதனால் 16 கண் பாலம் பகுதியில் சிறுவர், சிறுமிகளுக்கான ராட்டினங்கள், விளையாட்டு பொருட்கள், தின்பண்ட கடைகள் திடீரென அதிகளவில் தோன்றி உள்ளன.

அந்த பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருப்பதால் எங்கிருந்து பார்த்தாலும் இருசக்கர வாகனங்கள், கார்களின் அணிவகுப்பாக தான் காட்சி அளித்தது. மேலும் மேட்டூர் பூங்கா, அணைக்கட்டு முனியப்பன் கோவில், காவிரி ஆற்றின் படித்துறை ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததையொட்டி, மேட்டூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சவுந்தரராஜன் உத்தரவின் பேரில், மேட்டூர் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர். அவர்கள் லேடிஸ்சீட், ஜென்ஸ்சீட், ரோஜாத்தோட்டம், சேர்வராயன் கோவில், பக்கோடா பாயிண்ட் ஆகிய இடங்களுக்கு சென்று இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.

மேலும் ஏற்காட்டில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இதனால் படகு சவாரி குழாமில் ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை