கஜா புயலில் விழுந்த மரங்களை அகற்றி பாசன வாய்க்கால்களை தூர்வாரக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


கஜா புயலில் விழுந்த மரங்களை அகற்றி பாசன வாய்க்கால்களை தூர்வாரக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Aug 2019 11:00 PM GMT (Updated: 19 Aug 2019 5:36 PM GMT)

கஜா புயலில் விழுந்த மரங்களை அகற்றி பாசன வாய்க்கால்களை தூர்வாரக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி,

தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள் கஜா புயலால் கடுமையாக பாதித்தது. புயலின்போது திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி முள்ளியாறு மற்றும் அதன் கிளை வாய்க்கால்களில் ஏராளமான மரங்கள் சாய்ந்து விழுந்தன. இந்த மரங்கள் இதுவரை அகற்றப்படாமல் அப்படியே கிடக்கின்றன. ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரப்படாத நிலையில் புயலில் விழுந்த மரங்களும் அப்படியே கிடப்பதால் மழை காலத்தில் தண்ணீர் செல்ல முடியாமல் கரையும் உடையும் அபாயம் உள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் வரை செல்லும் முக்கிய பாசன ஆறாக உள்ள முள்ளியாற்றில் கடைமடை வரை தண்ணீர் செல்லுமா? என்பது சந்தேகம் என விவசாயிகள் கவலை தெரிவித்து வருகிறார்கள்.

ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் கஜா புயலின்போது ஆறு, பாசன வாய்க்கால்களில் விழுந்த மரங்களை முழுமையாக அகற்றி விட்டு, தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விவசாயிகள் சங்கம் சார்பில் திருத்துறைப்பூண்டி பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன் தலைமை தாங்கினார். விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ஜெயபால், நகர செயலாளர் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாவட்ட துணை செயலாளர் ஞானமோகன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சந்திரராமன், ஜோசப், ஒன்றிய செயலாளர் பாஸ்கர், நகர செயலாளர் முருகேசன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் பாலு, நகர தலைவர் பக்கிரிசாமி, நகர பொருளாளர் பரமசிவம், ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கருணாநிதி, தங்கராசு, ஞானசேகரன் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 

Next Story