க.பரமத்தி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் விலையில்லா மடிக்கணினி கேட்டு போலீசில் புகார்


க.பரமத்தி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் விலையில்லா மடிக்கணினி கேட்டு போலீசில் புகார்
x
தினத்தந்தி 20 Aug 2019 4:15 AM IST (Updated: 20 Aug 2019 1:54 AM IST)
t-max-icont-min-icon

க.பரமத்தி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் விலையில்லா மடிக்கணினி கேட்டு போலீசில் புகார் கொடுத்தனர்.

க.பரமத்தி,

கரூர் மாவட்டம், க.பரமத்தியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த வெள்ளிக் கிழமை அன்று பள்ளியில் படித்து வரும் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் 158 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் பள்ளி கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்டது.

இதனை தெரிந்துகொண்ட இப்பள்ளியில் 2018-19-ம் கல்வியாண்டில் படித்த முன்னாள் மாணவ-மாணவிகள் சிலர் எங்களுக்கும் இதுவரை மடிக்கணினி வழங்கப்பட வில்லை. இதனால் எங்களுக்கும் மடிக்கணினி உடனடியாக வழங்க வேண்டும் என நேற்று காலை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்து முறையிட்டனர். இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் கூடிய விரைவில் உங்கள் அனைவருக்கும் மடிக்கணினி வழங்கப்படும் என உறுதியளித்தனர்.

போலீஸ் நிலையத்தில் புகார்

இதனை ஏற்றுக்கொள்ளாத முன்னாள் மாணவ, மாணவிகள் க.பரமத்தி போலீஸ் நிலையத்திற்கு சென்று, மடிக்கணினி கேட்டு புகார் மனு கொடுத்தனர். புகாரின்பேரில் க.பரமத்தி போலீசார், பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) சத்தியமூர்த்தியை நேரில் வர வழைத்து விவரத்தை கேட்டனர். அதைத்தொடர்ந்து அவர் 3 மாதத்தில் விலையில்லா மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதையடுத்து முன்னாள் மாணவ-மாணவிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story