குளித்தலை ஆற்றுப்பாதுகாப்பு உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை


குளித்தலை ஆற்றுப்பாதுகாப்பு உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
x
தினத்தந்தி 19 Aug 2019 11:00 PM GMT (Updated: 19 Aug 2019 8:27 PM GMT)

குளித்தலை ஆற்றுப்பாதுகாப்பு உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குளித்தலை,

கரூர் மாவட்டம் மாயனூரில் இருந்து பிரிந்து செல்லும் தென்கரை, கட்டளை மேடு, புதிய கட்டளை மேடு உள்ளிட்ட வாய்க்காலில் உடனடியாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி, இந்த வாய்க்கால் பாசனம் மூலம் விவசாயம் செய்யும் விவசாயிகள் நேற்று குளித்தலை ஆற்று பாதுகாப்பு (உட்கோட்ட) உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை போலீசார் மற்றும் ஆற்று பாதுகாப்பு (உட்கோட்ட) உதவி பொறியாளர் கொளஞ்சிநாதன், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள் கூறுகையில், மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

தண்ணீர் திறக்கப்படவில்லை

காவிரி ஆற்றில் தண்ணீர் வரும்போது எப்பொழுதெல்லாம் கல்லணை திறக்கப்படுகிறதோ அதே நாளில் மாயனூரில் இருந்து பிரியும் தென்கரை, கட்டளை மேடு மற்றும் புதிய கட்டளை மேடு வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போது கல்லணை திறக்கப்பட்ட பிறகும் மாயனூரில் இருந்து பிரியும் வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் மாயனூர் முதல் குளித்தலை உள்ளிட்ட கரூர் மாவட்ட எல்லைவரை உள்ள பகுதியில் உள்ள விவசாயிகள் தற்போது பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, வெற்றிலை உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுவருகிறது. எனவே உடனடியாக தண்ணீர் திறக்கவேண்டுமென அதிகாரிகளிடம் வலியுறுத்த வந்ததாகவும் தண்ணீர் திறக்கும்வரை அலுவலகத்தை விட்டு செல்லமாட்டோமென தெரிவித்தனர்.

வாக்குவாதம்

இதையடுத்து அதிகாரிகள், வாய்க்கால் தூர்வாரும் பணி முடிந்தவுடன் வரும் 26-ந் தேதி அனைத்து வாய்க்கால் களிலும் தண்ணீர் திறக்கப்படும் என தெரிவித்தனர். அதற்கு விவசாயிகள் உடன்படவில்லை. மேலும் உதவி செயற்பொறியாளர் சரவணனை தொலைபேசியில் தொடர்புகொண்டு உடனடியாக அவரை அலுவலகத்திற்கு வருமாறு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த உதவி செயற்பொறியாளர் சரவணன் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது அவருக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதில் ஆத்திரமடைந்த விவசாயிகள் அந்த அலுவலக வளாகத்தின் உள்ளேயே அமர்ந்துவிட்டனர்.

நாளை திறக்கப்படும்

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து குளித்தலை வட்டாட்சியர் செந்தில் மற்றும் உதவி செயற்பொறியாளர் சரவணன் ஆகியோர் நாளை மாலைக்குள் (புதன் கிழமை) வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கபடுமென உறுதியளித்தனர். இதையடுத்து 4 மணிநேரம் நடத்திய முற்றுகை போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Next Story