ராசிபுரத்தில் கனமழை, ஆஸ்பத்திரி, வீடுகளில் தண்ணீர் புகுந்தது
ராசிபுரத்தில் கனமழை காரணமாக அரசு ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளில் மழை நீர் புகுந்தது.
ராசிபுரம்,
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தாலும் நாமக்கல், ராசிபுரம் உள்பட பல்வேறு இடங்களில் கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் காணப்பட்டது. கடந்த சில நாட்களாக அவ்வப்போது ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் பகலில் ராசிபுரத்தில் வெயில் சுட்டெரித்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ராசிபுரம் நகரில் திடீர் மழை கொட்டியது. சுமார் 2 மணி நேரம் இந்த கனமழை பெய்தது. இதனால் மழைநீர் சாக்கடையில் கலந்து தெருக்களில் தேங்கி நின்றது. மேலும் கண்ணையா தெருவில் உள்ள சில வீடுகளில் மழைநீர் புகுந்தது. மேலும் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரசவ வார்டு உள்பட சில வார்டுகளிலும் தண்ணீர் ஒரு அடி உயரத்திற்கு தேங்கி நின்றது.
இதனால் பிரசவத்திற்காக வந்திருந்த பெண்கள் நள்ளிரவில் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். ஆஸ்பத்திரியில் உள்ள வார்டுகளில் புகுந்த மழைநீர் கலந்த சாக்கடைநீரை நேற்று பகல் 11 மணியளவில் அப்புறப்படுத்தினார்கள். ஆஸ்பத்திரியில் உள்ள பெண்கள் பிரசவ வார்டு, குழந்தைகள் வார்டு போன்றவை தாழ்வான பகுதியில் இருப்பதால் மழைநீர் எளிதில் புகுந்து விடுகிறது. இதனால் தண்ணீரை அகற்ற நேரமானதாக தெரிவிக்கப்பட்டது. வரும் காலங்களில் ஆஸ்பத்திரிக்குள் தண்ணீர் புகாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கனமழை ராசிபுரம் மட்டுமல்லாமல் ஆண்டகளுர்கேட், பட்டணம், வடுகம், முத்துக்காளிப்பட்டி, கவுண்டம்பாளையம், புதுப்பாளையம், நாமகிரிப்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் பெய்தது. இதனால் வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றது. கனமழை காரணமாக நேற்று காலையில் குளிர்ந்த நிலை காணப்பட்டு வந்த நிலையில், பகல் 11 மணிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது.
Related Tags :
Next Story