2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ‘மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை அமைத்தே தீருவோம்’ - ஓ.பன்னீர்செல்வம் சபதம்


2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ‘மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை அமைத்தே தீருவோம்’ - ஓ.பன்னீர்செல்வம் சபதம்
x
தினத்தந்தி 20 Aug 2019 4:45 AM IST (Updated: 20 Aug 2019 2:19 AM IST)
t-max-icont-min-icon

2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை அமைத்தே தீருவோம் என்று தேனியில் நடந்த விழாவில் ஓ.பன்னீர்செல்வம் சபதம் ஏற்று பேசினார்.

தேனி,

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் அ.ம.மு.க. உள்பட மாற்றுக் கட்சிகளை சேர்ந்தவர்கள் அ.தி.மு.க.வில் இணையும் விழா நேற்று நடந்தது. விழாவில், மாற்றுக் கட்சிகளில் இருந்து அ.தி.மு.க.வில் இணைந்தவர்களை வரவேற்று ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வுக்கு இன்றைக்கு மகிழ்ச்சிகரமான திருநாள். எம்.ஜி.ஆர். 1972-ம் ஆண்டு அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை தொடங்கி வைத்து, 3 முறை முத்தான முதல்-அமைச்சராக, யாரும் அசைக்க முடியாத முதல்-அமைச்சராக நல்ல பல திட்டங்களை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்து, சிறப்பான ஆட்சியை செய்தார்.

எம்.ஜி.ஆரை தொடர்ந்து ஜெயலலிதா 28 ஆண்டுகள் கழகத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்று இந்த இயக்கத்துக்கு எதிரிகளால் ஏற்பட்ட துன்பங்கள், துயரங்கள், வழக்குகளை தாங்கி நின்று, எம்.ஜி.ஆருக்கு கொடுத்த சத்தியத்தின்படி, உறுதுணையாக இருந்து கழகத்தை கட்டிக் காத்தார்.

எம்.ஜி.ஆர். மறைந்தபோது 16 லட்சம் உறுப்பினர்களாக இருந்த இந்த இயக்கத்தை, 1½ கோடிக்கும் மேற்பட்ட தூய தொண்டர்களை கொண்ட மாபெரும் இயக்கமாகவும், யாராலும் அசைக்க முடியாத எக்குக் கோட்டையாகவும் மாற்றியவர் ஜெயலலிதா. இந்த இயக்கத்தில் சாதாரண தொண்டனாக இருப்பதே நமக்கு பெருமை.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சில, சில பிரச்சினைகள் ஏற்பட்டது. ஒரு குடும்பத்தில் இருக்கும் அண்ணன், தம்பிகளுக்கு கூட சிறு, சிறு மனஸ்தாபங்கள் ஏற்படும். அதுபோல் நமது இயக்கத்திலும் ஏற்பட்டது. ஆனால், இன்றைக்கு நாம் அனைவரும் ஒன்று கூடியிருக்கிறோம். நான் எத்தனையோ நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறேன். இன்றைய நிகழ்ச்சியில் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். இந்த விழாவில், மாவட்டம் முழுவதும் இருந்து 5,358 பேர் தாய் கழகத்தில் இணைந்து இருக்கிறார்கள். இன்னும், பலர் வர உள்ளனர்.

இவ்வளவு பெரிய இயக்கத்தை யார் நினைத்தாலும் எதுவும் செய்து விட முடியாது. இது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். தொண்டர்களால் தொடங்கப்பட்ட இயக்கத்தில் எம்.ஜி.ஆர். மக்கள் ஆட்சியை தான் நிறுவினார். மக்கள் ஆட்சி என்பது மக்களுக்கு எந்த சூழ்நிலையிலும் நன்மை செய்யும் ஆட்சி.

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு அ.தி.மு.க.வுக்கு அனைத்து கட்சிகளில் இருந்தும் வருகிறார்கள் என்றால், தமிழகத்தை எதிர்காலத்தில் காப்பாற்றும் ஒரே கட்சி அ.தி.மு.க. தான். ஜெயலலிதா நடந்து வந்த பாதையில் நாம் நடந்து கொண்டு இருக்கிறோம். பொது வாழ்வில் பொறுப்பில் இருப்பவர்கள் விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று பேரறிஞர் அண்ணா சொன்னார். அதை தான் எங்களை போன்ற பொறுப்பில் இருப்பவர்கள் எதிர்க்கட்சிகளில் இருந்தும், பல்வேறு தனிப்பட்டவர்களிடம் இருந்தும் வரும் விமர்சனங்களை பொருட்படுத்தாமல், எந்த சூழ்நிலையிலும் இந்த இயக்கம் பலவீனம் ஆகிவிடாமல் சமாளிக்கும் நோக்கோடு, கட்டிக் காக்கும் லட்சிய நோக்கோடு தான் எங்களின் அரசியல் பயணம் இருக்கிறது.

நம்முடைய பொது எதிரி தி.மு.க. தான். தி.மு.க. என்ற பொது எதிரியை எதிர்கொள்ள நாம் ஒன்றிணைந்து உள்ளது எனக்கு புது எழுச்சியை தந்து இருக்கிறது. தேனி மாவட்டத்தில் இது ஒரு அச்சாணியாக இருக்கிறது. ஏனெனில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் மகத்தான வெற்றியை பெற்று கொடுத்து இருக்கிறீர்கள். இந்த வெற்றி சாதாரண வெற்றி அல்ல. இந்த வெற்றி தான் நமக்கு அச்சாரம். இதில் இருந்து 2021-ல் சந்திக்கப் போகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை அமைத்தே தீருவோம் என்ற சபதத்தை நாம் ஏற்போம்.

இன்றைய தினம் 1972-ம் ஆண்டுகளில் இருந்தே கட்சியில் இருந்தவர்கள் எல்லாம் தாய் கழகத்தில் இணைந்து இருக்கிறார்கள். இது தான் என் வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியான நாள்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், மாவட்ட செயலாளர் சையதுகான், முன்னாள் எம்.பி. பார்த்திபன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story