முல்லைப்பெரியாறு அணையில் இருந்து, கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு வரவேண்டும் - கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு


முல்லைப்பெரியாறு அணையில் இருந்து, கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு வரவேண்டும் - கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 21 Aug 2019 4:15 AM IST (Updated: 20 Aug 2019 11:10 PM IST)
t-max-icont-min-icon

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு வரவேண்டும் என்று சித்தார்பட்டி கிராம விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

தேனி,

ஆண்டிப்பட்டி அருகே உள்ள சித்தார்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

சித்தார்பட்டி கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். எங்களது முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக போதிய மழைப்பொழிவு இல்லாத காரணத்தினால் நீர்நிலைகள் வறண்டு, நிலத்தடி நீரும் இல்லாமல் குளங்கள், கண்மாய்கள் வறண்டுவிட்டன.

இதன்காரணமாக தெப்பம்பட்டி, ராஜாக்கால்பட்டி, கீழமஞ்சி, தோப்புப்பட்டி, ராஜதானி, வண்டியூர், சக்கம்மாள்பட்டி, எஸ்.கதிர், அம்மாபட்டி, கே.கே.புரம் ஆகிய கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஜி.உசிலம்பட்டி கண்மாய்க்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வர பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த திட்டத்தோடு இணைப்பு திட்டமாக 1987-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். அடிக்கல் நாட்டிய திப்பரேவு திட்டத்தை இணைத்து செயல்படுத்த வேண்டும்.

அதன்மூலம் முல்லைப்பெரியாற்றில் இருந்து விருமானூத்து கண்மாய்க்கும், தெப்பம்பட்டி கண்மாய்க்கும் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு தண்ணீர் கொண்டு வரப்பட்டால் சித்தார்பட்டி கிராமத்தில் குடிநீர் பிரச்சினைக்கும், விவசாய பணிக்கும் தீர்வு கிடைக்கும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

Next Story