கோவை அருகே, காட்டு யானை மிதித்து தனியார் மருத்துவமனை ஊழியர் பலி


கோவை அருகே, காட்டு யானை மிதித்து தனியார் மருத்துவமனை ஊழியர் பலி
x
தினத்தந்தி 20 Aug 2019 11:00 PM GMT (Updated: 20 Aug 2019 7:17 PM GMT)

கோவை அருகே காட்டு யானை மிதித்து தனியார் மருத்துவமனை ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

துடியலூர்,

கோவையை அடுத்த துடியலூர் அருகே தொப்பம்பட்டி கணபதி கார்டனை சேர்ந்தவர் பிரேம்தாஸ் (வயது 36). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (30) என்பவருடன் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் அங்குள்ள ஒரு தென்னந்தோப்பில் இருந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு திடீரென்று ஒரு காட்டு யானை வந்தது. அதை பார்த்ததும் அவர்கள் 2 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார்கள். ஆனாலும் அந்த காட்டு யானை அவர்களை விடாமல் வேகமாக துரத்திச்சென்றது. இதில் பிரேம்தாசை காட்டு யானை துதிக்கையால் பிடித்து தூக்கி வீசியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

இதனால் அவரால் எழுந்து ஓட முடிய வில்லை. ஆனாலும் ஆவேசமாக வந்த அந்த காட்டு யானை பிரேம்தாசை காலால் வேகமாக மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் காட்டுயானை பிளிறியபடி அங்கேயே நின்றது. காட்டு யானையிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடிய போது தவறி விழுந்து விக்னேஷ் காயம் அடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் பட்டாசுகளை வெடித்து காட்டு யானையை வனப் பகுதிக்குள் துரத்தினார்கள். பின்னர் அவர்கள் பிரேம்தாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த விக்னேஷ் அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

கணுவாய், தடாகம், மாங்கரை, பொன்னூத்துமலை ஆகிய பகுதிகளில் விநாயகன், சின்னதம்பி ஆகிய 2 யானைகள் சுற்றித்திரிந்தன. அவை, கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தன. எனவே வனத்துறையினர் விநாயகனை பிடித்து முதுமலை வனப்பகுதியிலும், சின்னதம்பியை பிடித்து ஆனைமலை வனப்பகுதியிலும் விட்டனர். இதனால் காட்டு யானைகளின் தொந்தரவு குறைந்துவிடும் என்று நம்பினோம்.

ஆனால் விநாயகன், சின்னதம்பி யானைகள் இருந்த வரை மற்ற யானைகள் இந்த பகுதிக்குள் வர வில்லை. ஆனால் தற்போது கேரளாவில் இருந்து வரும் காட்டு யானைகள் இங்கு முகாமிட்டு உள்ளன. இதில் கூட்டத்தை விட்டு துரத்தப்பட்ட காட்டு யானை தான் 2 பேரை கொன்று உள்ளது. இந்த யானைக்கு கொம்பன் என்றும் பெரியதம்பி என்றும் பெயரிடப்பட்டு உள்ளது. அந்த யானையால் ஆபத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று கருதினோம்.

தொப்பம்பட்டியில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் தான் கணுவாய் சஞ்சீவி நகர் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரை கடந்த 18-ந் தேதி இரவு காட்டு யானை மிதித்து கொன்றது. அதன்பிறகும் அங்கேயே முகாமிட்டு இருந்த காட்டு யானை தற்போது பிரேம்தாசையும் மிதித்து கொன்று உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

தற்போது அந்த காட்டு யானை பொன்னூத்துமலையில் முகாமிட்டு உள்ளது. எனவே அதை அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்த வேண்டும். உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க இங்கு கும்கி யானையை நிறுத்த வேண்டும். வனத்துறையினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story