திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகத்தை ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் முற்றுகை


திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகத்தை ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் முற்றுகை
x
தினத்தந்தி 21 Aug 2019 4:30 AM IST (Updated: 21 Aug 2019 1:01 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர்-காரைக்குடி ரெயில் பாதையில் கேட் கீப்பர்கள் நியமிக்க கோரி, திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகத்தை ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி,

திருவாரூர்-காரைக்குடி இடையே இருந்த மீட்டர் கேஜ் பாதை அகல ரெயில் பாதையாக சமீபத்தில் மாற்றப்பட்டது. இதில் திருவாரூர்-காரைக்குடி இடையே ‘டெமு’ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வழித்தடத்தில் உள்ள மொத்தம் 77 ரெயில்வே கேட்களில் 5 கேட்களில் மட்டும் கேட் கீப்பர்கள் உள்ளன. மீதமுள்ள 72 ரெயில்வே கேட்களில் கீப்பர்கள் இல்லை.

‘டெமு’ ரெயிலில் முன் மற்றும் பின் பக்கம் தலா ஒரு ஊழியர் பணியில் இருந்து ரெயில்வே கேட் அருகே ரெயில் வரும்போது அந்த ஊழியர்கள் இறங்கி சென்று கேட்டை மூடுவதும், பின்னர் திறந்து விடுவதுமாக உள்ளனர். இதனால் 3 மணி நேரத்தில் செல்லக்கூடிய ரெயிலின் பயண நேரம் 7 மணி நேரமாக உள்ளது. எனவே ரெயில்வே கேட் கீப்பர்களை உடனடியாக நியமிக்க கோரி திருவாரூர்-காரைக்குடி ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினரும், பொதுமக்களும் ரெயில்வே நிர்வாகத்தினருக்கு வலியுறுத்தி வருகின்றனர்.

முற்றுகை

இந்த நிலையில் கேட் கீப்பர்கள் நியமிக்க கோரி, திருச்சி ஜங்ஷனில் உள்ள கோட்ட ரெயில்வே மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக திருவாரூர், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் நேற்று காலை வேன், கார் மற்றும் பஸ்களில் புறப்பட்டு திருச்சி வந்தனர். கோட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவாரூர்-பட்டுக்கோட்டை-காரைக்குடி ரெயில் பாதை உபயோகிப்பாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். பட்டுக்கோட்டை நகர வர்த்தக சங்க தலைவர் ராமானுஜம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

முடிவில் ஒருங்கிணைப்பு செயலாளர் விவேகானந்தம் நன்றி கூறினார்.

உண்ணாவிரத போராட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி தொகுதி எம்.பி. திருநாவுக்கரசர் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டு பேசினார். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்ற ரெயில்வே மத்திய மந்திரி மற்றும் தெற்கு ரெயில்வே தலைமை அதிகாரிகளிடம் வலியுறுத்துவதாக தெரிவித்தார். கோரிக்கைகள் தொடர்பாக மனுவை திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளரிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் அளித்தனர்.

ஆர்ப்பாட்டம் குறித்து ஜெயராமன் நிருபர்களிடம் கூறுகையில், “திருவாரூர்-பட்டுக்கோட்டை-காரைக்குடி ரெயில் பாதையில் கேட் கீப்பர் பணியிடங்களுக்கு முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற போலீசார், ஊர்க்காவல் படையினர், உள்ளூர் இளைஞர்களை தக்க பயிற்சி கொடுத்து உடனே நியமிக்க வேண்டும். காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை-திருவாரூர் வழியாக சென்னைக்கு இரவு மற்றும் பகல் நேர விரைவு ரெயில்களை இயக்க வேண்டும். மீட்டர் கேஜ் பாதையில் இயங்கிய அனைத்து ரெயில்களையும் இயக்க வேண்டும். திருவாரூரில் இருந்து தென் மாவட்டம் மற்றும் வட மாநிலங்களுக்கு ரெயில் சேவை தொடங்க வேண்டும். திருவாரூர்-காரைக்குடி அகல பாதையில் கேட் கீப்பர்களை நியமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்ததாக சென்னையில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்” என்றார்.

Next Story