விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது


விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 20 Aug 2019 11:00 PM GMT (Updated: 20 Aug 2019 8:41 PM GMT)

குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமையில் நடந்தது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடு குறித்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமையில் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் முன்னிலை வகித்தார். இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., அகில பாரத இந்துமகா சபா, சிவசேனா, விசுவ இந்து பரிஷத் போன்ற அமைப்பினர், அனைத்துத்துறை அலுவலர்கள், தாசில்தார்கள், போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் குமரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் நிறுவுவது மற்றும் நீரில் கரைக்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியதாவது:-

விநாயகர் சிலை வைக்கப்படும் இடத்துக்கு தடையில்லா சான்று பெற வேண்டும். பொது இடங்களில் சிலை வைத்தால் அந்தந்த ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, நெடுஞ்சாலை துறையிடம் அனுமதி பெற வேண்டும். தனியார் இடமாக இருந்தால் நில உரிமையாளரின் தடையில்லா சான்று பெறப்பட வேண்டும்.

மாசு கட்டுப்பாட்டு வாரியம்

ஒலிபெருக்கி வைக்க அந்தந்த போலீஸ் நிலையத்தில் அனுமதி பெறவும், தற்காலிக கூடாரம் அமைக்க தடையில்லா சான்று தீயணைப்பு துறையிடம் பெற்றிருக்க வேண்டும். சிலையை தயாரிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுரைப்படி களிமண் மற்றும் இயற்கையான சாயங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ரசாயன நிறங்கள் பயன்படுத்தக் கூடாது.

மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், பிறவழிபாட்டு தலங்கள் அருகில் சிலை வைக்க அதிகாரிகள் அனுமதி வழங்கக்கூடாது. கூம்புவடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக்கூடாது. அளவுக்கு அதிகமான சத்தம் தடை செய்யப்படுகிறது.

பட்டாசுகளுக்கு தடை

சிலை நிறுவப்பட்ட இடத்தில் 24 மணி நேரமும் சம்பந்தப்பட்ட 2 நபர்கள் பாதுகாப்பு பணியில் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும். விநாயகர் சிலை ஊர்வலத்திலோ, சிலையை கரைக்கும் இடத்திலோ கண்டிப்பாக பட்டாசுகள் வெடிக்கக்கூடாது. போலீசார் வரையறுத்துக் கொடுத்த பாதை வழியாக விநாயகர் சிலை ஊர்வலம் செல்ல வேண்டும். பொது அமைதிக்கும், பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் இருக்க அதிகாரிகள் மற்றும் இயக்கத்தினர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.

நிகழ்ச்சியில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜய பாஸ்கரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகன்யா, அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் இந்து அமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.

Next Story